உலகைக் காக்க உறுதியான திட்டங்கள் வேண்டும்

Articles 2 ஆண்டுகள் முன்

banner

வலிகளை வாரி வழங்கிய வருடமாகவே 2021 விடைபெற்றுள்ளது. அதனால் ஏற்பட்ட நேரடி மற்றும் மறைமுக தாக்கங்களை வெறும் வார்த்தைகளால் மட்டும் விவரித்துவிடமுடியாது.  அத்தனை வலி -  வேதனை மிக்கது.  அதன் தாக்கம் புத்தாண்டிலும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும் என்பது வேதனைக்குரிய தகவலாகும். 





2019 டிசம்பரில் சீனாவின் வுவான் பகுதியில் பிறப்பெடுத்ததாக நம்பப்படும் கொரோனா வைரஸானது, கட்டுக்கடங்காது, எல்லா நாடுகளுக்குள்ளும் ஊடுருவி அசுர வேகத்தில் பரவியது. மக்கள் வகைதொகையின்றி பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புகளும் உச்சம்தொட ஆரம்பித்தன.  குறித்த வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவதென தெரியாமல் - வழி புரியாமல் வல்லரசு நாடுகள்கூட கதிகலங்கி - விழிபிதுங்கி நின்றன.





நாடுகள் முடங்கின.விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துகள் இரத்து செய்யப்பட்டன. பல நாடுகள் எல்லைகளை மூடின. கடும் கட்டுப்பாடுகளை விதித்தன. சுகாதார பாதுகாப்புக்காக இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும்   அதனால் பொருளாதாரத்துக்கு மரண அடி என்றே கூறவேண்டும்.





உற்பத்திகள் பாதிக்கப்பட்டன, சுற்றுலாத்துறைகள் முழுமையாக முடங்கின,  முதலீடுகள் தேக்கமடைந்தன, வர்த்தக  நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன, பெரும் நிறுவனங்கள் வீழ்ச்சி கண்டன, பலர் தொழில் வாய்ப்புகளை இழந்தனர், இதனால் இலங்கை உட்பட மூன்றாம் உலக நாடுகளுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டன.  சுற்றுலாத்துறையை நம்பியுள்ள இலங்கைக்கு அத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியானது , இன்று பஞ்சம் ஏற்படும் நிலைமைவரை நாட்டை அழைத்துவந்துள்ளது. 





அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் ஆரம்பத்தில் பொதுமுடக்க நிலைமையை முழுமையாக விரும்பினாலும் - நம்பினாலும் , அதனால் ஏற்பட்ட விளைவுகளால் பின்னர் அவ்வாறான அணுகுமுறையை  விரும்பவில்லை.  ‘கொவிட்’ உடன் வாழ பழகுவோம்’ என்ற நிலைமை ஏற்படுத்தப்பட்டது.  அதுமட்டுமல்ல தடுப்பூசிகளை ஏற்றி, கொரோனாவிலிருந்து பாதுகாப்பு பெறும் நடவடிக்கையில் தீவிரம் காட்டப்பட்டன.  





இதன்பிரகாரம் தடுப்பூசி கைகொடுக்க உலகளவில் கொரோனா மரண விகிதம் ஓரளவு வீழ்ச்சி கண்டிருந்தாலும்,  பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது. மறுபுறத்தில் கொரோனா வைரசும் - உருமாறி - புதிய பிறழ்வுகளை உருவாக்கி - உலகை மீண்டும், மீண்டும் அச்சுறுத்திவருகின்றன.





எல்பா, அதன்பின்னர் ஊழித்தாண்டவமாடிய டெல்டா என பல பிறழ்வுகள் உருவாகி - பல பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது ‘ஒமிக்ரோன்’ பிறழ்வு தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்டாவும், ஒமிக்ரோனும் இணைந்து 2022 இல் பாரிய சுனாமியை ஏற்படுத்துமென உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.





எனவே, தடுப்பூசி ஏற்றிக்கொண்டு, வலிகளை தாங்கிக்கொண்டு, 2022 இலாவது வழி பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் நிம்மதி பெருமூச்சுவிட காத்திருந்த மக்கள் மத்தியில் ‘ஒமிக்ரோன்’ பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.  சிலவேளை 2020 மற்றும் 2021 இல் அரங்கேறிய மிகக்கொடூரமான சம்பவங்கள் 2022 இலும் அரங்கேறலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.  எனவே, இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி, மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், உலக சக்கரம் தடையின்றி இயங்குவதற்குமான வழிவகைகள் உலக நாடுகள் - கூட்டாக இணைந்தாவது மேற்கொள்ள வேண்டும். ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகள் இது தொடர்பான கருத்தாடல்களை - வழிப்புணர்வு வேலைத்திட்டங்களை தீவிரப்படுத்த வேண்டும். தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்துவதற்கு வறுமை நாடுகளை ஊக்குவிக்க வேண்டும் - உதவிகளை வழங்க வேண்டும்.  





கொரோனா ஏற்படுத்திய பொருளாதார பேரழிப்புகளை ஈடுசெய்வதற்கு இன்னும் பல ஆண்டுகள் செல்லும்.  தற்போதே மூன்றாம் உலக நாடுகள்  கடுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளன.  வறுமை நாடுகளில் பஞ்சமும் தலைதூக்கியுள்ளது. சிறார்கள் மத்தியில் மந்தபோசனையும் அதிகரித்துள்ளது. இதனால் எமது எதிர்கால சந்ததியினருக்கு சுகாதார பாதுகாப்பற்ற நிலையும் ஏற்படும் அபாயம் இருக்கின்றது.   





‘ஒமிக்ரோன்’ குறித்து கூடுதல் கவனத்தை உலக சுகாதார அமைப்பு செலுத்த வேண்டும் என்பதுடன், கொரோனாவால் ஏற்பட்ட புற தாக்கங்கள் பற்றியும் தனது பார்வையை செலுத்த வேண்டும். கொரோனா தொற்றிய பின்னர் ஏற்படும் சுகாதார பாதிப்புகள் - எதிர்கால சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் பற்றியும் அவசர கூட்டங்களை - உலக மாநாட்டுகளை நடத்தி திட்டங்களை வகுக்க வேண்டும். மறுபுறத்தில்  உணவு நெருக்கடி உட்பட இதர விவகாரங்கள் பற்றி ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.