ஒமிக்ரோன் தாக்கத்தையடுத்து தனது திருமணத்தை நிறுத்தினார் நியூசிலாந்து பிரதமர்

Politics 2 ஆண்டுகள் முன்

banner

நியூசிலாந்து பிரதமர், ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது திருமணத்தை நிறுத்தி உள்ளார். அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது.





உலகில் கொரோனாவை எதிர்கொண்டதில் சிறப்பாக செயல்பட்ட நாடு என்றால் அது நியூசிலாந்துதான். மிக வேகமாக கொரோனாவை கட்டுப்படுத்தி அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றார். உலக நாடுகள் பல நியூசிலாந்தின் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றும் வகையில் ஜெசிந்தா ஆர்டர்ன் சிறப்பாக செயல்பட்டார்.





அங்கு இதுவரை மொத்தமாக 15,550 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர்.





கொரோனா பரவல் சிறப்பாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் திடீரென கடந்த ஒரு வாரமாக் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. சமீபத்தில் அங்கு ஒரே குடும்பத்தில் 8 பேருக்கு ஓமிக்ரான் ஏற்பட்டது. இவர்கள் நியூசிலாந்தில் பல மாகாணங்களுக்கு திருமணம் உள்ளிட்ட பல விழாக்களில் கலந்து கொள்ள சென்றனர். இதனால் அங்கு புதிய கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. தினசரி கேஸ்கள் 70ஐ தாண்டி உள்ளது.





இதையடுத்து அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது. ரெட் செட்டிங் எனப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரிய அளவில் விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகள், கூட்டங்களில் 2 டோஸ் போட்ட 100 பேர் வரை மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.





அங்கு கொரோனாவிற்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். அப்படித்தான் இந்த முறையும் கட்டுப்பாடுகள் தீவிரம் ஆக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி இறுதிவரை அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தனது திருமணத்தை நிறுத்தி உள்ளார்.





ஜெசிந்தா ஆர்டர்ன் தனது நீண்ட கால காதலர் கிளார்க் கேபோர்டை திருமணம் செய்து கொள்ள இருந்தார் . இதற்காக அவர் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து இருந்தார். அந்நாட்டு அரசியல் தலைவர்கள் இதற்காக அழைக்கப்பட்டு இருந்தனர். அந்த நாட்டின் பேவரைட் ஜோடி இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்களின் திருமணத்தை மக்களே ஆர்வமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தனர். ஆனால் கடைசியில் திருமணம் நடக்கவில்லை.





வரும் வாரம் அவர்களின் திருமணம் நடக்க இருந்தது. தற்போது கொரோனா கட்டுப்பாடுகளை காரணம் காட்டி அவர் திருமணத்தை நிறுத்தி உள்ளார். அவரின் இந்த முடிவு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் இது தொடர்பாக அளித்த பேட்டியில், இதுதான் வாழக்கை. இப்படித்தான் இருக்கும்… திருமணத்தை நான் இப்போது நடத்துவது சரியாக இருக்காது.