டக்ளஸ் உட்பட 10 பேர் இன்று அமைச்சராகின்றனர்!

banner

10 அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய, ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.





அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களைச் சேர்ந்த பத்து அமைச்சர்கள் இவ்வாறு பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது.





சு.கவின் சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, சுயேச்சைக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி சுசில் பிரேம ஜயந்த, விஜயதாச ராஜபகச, டிரான் அலஸ், நளின் பெர்னாண்டோ, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, சஜித் அணி சார்பில் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார ஆகியோர் அமைச்சு பதவிகளை ஏற்கவுள்ளனர்.





சுகாதார அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வாவும், விவசாய அமைச்சராக மஹிந்த அமரவீரவும், கல்வி அமைச்சராக சுசில் பிரேம ஜயந்தவும், நீதி அமைச்சராக விஜயதாச ராஜபக்சவும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக டிலான் அலசும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.





இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் நேற்றிரவு (19) இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு திரும்பியதும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்.





கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் டொக்டர் ரமேஷ் பத்திரன ஆகியோரும் இன்று அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.





ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட 25 உறுப்பினர்களுக்கு அமைச்சரவை வரையறுக்கப்பட்டுள்ளது, அவர்களில் நான்கு பேர் ஏற்கனவே பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.





எஞ்சிய அமைச்சர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் பிற்பகலில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.





இதேவேளை, 30 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.





புதிய அமைச்சரவை அமைச்சர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைச்சர்களின் சிறப்புரிமைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.