'காலிமுகத்திடல் நினைவேந்தல்' - கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிப்பு

Politics 1 வருடம் முன்

banner

" முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளமையானது, இன ஐக்கியத்தின் சிறந்ததொரு ஆரம்பமாக இருக்கும் என நம்புகின்றேன். அதேபோல தேசிய இனப் பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு முன் வைக்கப்பட வேண்டும். அப்போது இந்நாடு மீளெழுச்சிபெறும்.”





இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான த. சித்தார்த்தன் தெரிவித்தார்.





நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் ,இது தொடர்பில் மேலும் கூறியவை வருமாறு,





“ போரில் உயிரிழந்த மக்களுக்கு முள்ளிவாய்க்காலிலும், வடக்கு, கிழக்கில் ஏனைய பகுதிகளிலும் நேற்று (நேற்று முன்தினம்) நினைவேந்தல் மிகவும் உணர்வூப்பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இம்முறை விசேடமாக, காலி முகத்திடலிலும் அந்த நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.இதனை நல்லதொரு ஆரம்பமாக - அறிகுறியாக நான் பார்க்கின்றேன்.இளைஞர்கள் மத்தியில் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. இது இன ஒற்றுமைக்கான சிறந்த ஆரம்பமாக அமையும் என நம்புகின்றேன்.





ஆட்சி முறைமை மாற்றம், அரசமைப்பு மாற்றம் பற்றியெல்லாம் தற்போது பேசப்படுகின்றது. எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காணப்பட வேண்டும். அப்போதுதான் தாங்களும் இலங்கையர்கள் என்ற உணர்வு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்குவார்கள். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து முதலீடுகள் வரும். அரசியல் தீர்வே நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக அமையும்.” - என்றார்.