அமைச்சராகிறார் ஜீவன்! ஐ.தே.கவுடன் இ.தொ.கா. சங்கமம்!!

Politics 1 வருடம் முன்

banner

சர்வக்கட்சி இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில், அங்கம் வகிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதம அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கமைய புதிய அமைச்சரவை பெயர் பட்டியலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.





புதிய அரசில், மொட்டுகட்சிதவிர, ஏனைய கட்சிகளுக்கான, அமைச்சுகளை ஒதுக்கும் பொறுப்பு
பிரதமரிடமே கையளிக்கப்பட்டுள்து. அந்தவகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜீவன் தொண்டமானின், பெயரை பரிந்துரைத்துள்ளார்.





அமைச்சு பதவியை ஏற்பதற்கு காங்கிரஸ் தரப்பு கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருந்தாலும், இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.





இந்தியா சென்றுள்ள இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோர் நாடு திரும்பிய பின்னர், இது சம்பந்தமாக கலந்துரையாடி இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சி ஒப்புதல் வழங்கும் பட்சத்தில் திங்கட்கிழமை (23) ஜீவன் தொண்டமான், அமைச்சராக பதவியேற்கக்கூடும்.





இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கு முதன்முறையாக அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியை ஐக்கிய தேசியக்கட்சியே 1977 இல் வழங்கியது. ஜே.ஆர். ஜயவர்தனவே இந்த வாய்ப்பை வழங்கினார். 'தலைவர்' தொண்டமானை, 'அமைச்சர்' தொண்டமானாக்கியது ஜே.ஆர்.தான். அவரின் மருமகன்தான் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.





1947 ஆம் ஆண்டு முதலே ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையில் ‘அரசியல் உறவு’ இருந்துவருகின்றது. 77 இற்கு பிறகு அந்த உறவு மேலும் வலுவடைந்தது. எனினும், 2004 இறுதி காலப்பகுதியில் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.





இந்நிலையிலேயே சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு அந்த உறவை காங்கிரஸ் புதுப்பித்துக்கொண்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, சந்தித்து அவருக்கான ஆதரவை இ.தொ.கா. வெளிப்படுத்தியுள்ளது.





இ.தொ.கா. - ஐதேக உறவு





? 1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தல் (பியகம தொகுதி) ஊடாகவே ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் தெரிவானார். அத்தேர்தலில் மஸ்கெலியா தொகுதியில் போட்டியிட்ட சௌமியமூர்த்தி தொண்டமானும் வெற்றிபெற்றார். ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐ.தே.க. அரசில் அவருக்கு அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது. அப்போது ரணில் விக்கிரமசிங்க, பிரதி வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டார். பின்னர் இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சு பதவி ரணிலிடம் ஒப்படைக்கப்பட்டது.





? 1947 இல் மக்கள் ஆணையுடனும், 1960 மற்றும் 1965 களில் நியமன பட்டியல் ஊடாகவும் சௌமியமூர்த்தி தொண்டமான் நாடாளுமன்றம் தெரிவாகி இருந்தாலும், 1977 இல், ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில்தான் அவருக்கு அமைச்சு பதவி வழங்கப்பட்டது.





?1977 இற்கு பிறகு 1989 இல்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய இ.தொ.கா. வேட்பாளர்கள் இருவரும் தோல்வியடைந்தனர். எனினும், இ.தொ.காவுக்கு இரு தேசியப்பட்டில் ஆசனங்களை ஐக்கிய தேசியக்கட்சி வழங்கியது. சௌமியமூர்த்தி தொண்டமானும், தேவராஜும் சபைக்கு வந்தனர். அமைச்சு பதவிகளையும் வகித்தனர். ரணிலும் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தார்.





?1993 இல் ஜனாதிபதி பிரேமதாச கொல்லப்பட்ட பின்னர், பிரதமராக இருந்த டி.பீ. விஜேதுங்க ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது. ரணில் பிரதமராவதற்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கியது.
? 1994 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.கவின்கீழ்தான் இதொகா போட்டியிட்டது. நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தின்கீழ் இ.தொ.கா. வேட்பாளர்களாக களமிறங்கிய முத்து சிவலிங்கம் , சுப்பையா சதாசிவம் , ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் வெற்றிபெற்றனர். தேசியப்பட்டியல் ஊடாக சௌமியமூர்த்தி தொண்டமான் சபைக்கு வந்தார்.





தேர்தலின் பின்னர், சந்திரிக்கா தலைமையிலான மக்கள் கூட்டணிக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கியது. தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு பதவி சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு வழங்கப்பட்டது.





?1999 சௌமியமூர்த்தி தொண்டமான் காலமானார். இ.தொ.காவின் தலைமைப்பதவி ஆறுமுகன் தொண்டமானின்கீழ் வந்தது.





? 2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணியே வெற்றிபெற்றது. இக்கூட்டணியின்கீழ்தான் இ.தொ.கா. போட்டியிட்டது. ஆறுமுகன் தொண்டமான், முத்துசிவலிங்கம், ஜெகதீஸ்வரன் ஆகியோர் வெற்றிபெற்றனர்.





எனினும், ஓராண்டுக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் ஐ.தே.கவுடன் இணைந்து யானை சின்னத்தில் இ.தொ.கா. போட்டியிட்டது.நுவரெலியா மாவட்டத்தில் ஐ.தே.க. பட்டியலில் போட்டியிட்ட ஆறுமுகன் தொண்டமான் , பெ. சந்திரசேகரன், முத்து சிவலிங்கம் ஆகியோர் வெற்றிபெற்றனர்.





? 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. இதில் யானை சின்னத்தின்கீழ் இ.தொ.கா. போட்டியிட்டது. தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்சவுடன் சங்கமித்தது. அதன் பின்னர் ரணிலுடன் இ.தொ.காவுக்கு நல்லுறவு நீடிக்கவில்லை.
? 2010, 2015
பொதுத்தேர்தல்களின்போது மஹிந்த தலைமையில் வெற்றி கூட்டணியிலேயே இ.தொ.கா. போட்டியிட்டது. 2020 இல் மொட்டு சின்னத்தில் களமிறங்கியது. எனினும், 2022 மே இல் ராஜபக்ச அரசிலிருந்து இ.தொ.கா. வெளியேறியது.
புதிய பிரதமராக ரணில் விக்கிரமிங்க பதவியேற்றுள்ளார். அவரின் கீழான அரசுக்கு இ.தொ.கா. நேசக்கரம் நீட்டியுள்ளது.





ஆர்.சனத்