நாடாளுமன்றம் செல்கிறார் சுத்திகரிப்புப் பணிப் பெண்

banner

இம்முறை பிரான்ஸின் நாடாளுமன்றத்துக்குத் தெரிவானோரில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைந்துள்ள போதிலும் அவர்களில் மிக முக்கியமானவர் ரஷெல் கேக்(Rachel Keke) என்ற 48 வயதான ஆபிரிக்க வம்சாவளிப் பெண்.





பாரிஸ் நகரின் Batignolles பகுதியில் உள்ள பிரபல இபிஸ் ஹொட்டேலில் (Ibis hotel) அறைகளைத் துப்புரவு செய்யும் ஊழியர்(la femme de ménage.). நாளாந்தம் நாற்பது என்ற கணக்கில் அறைகளைத் தூய்மைப்படுத்தும் பணியியில் மிக நீண்ட காலம் ஈடுபட்டுவந்த அவர், அதே பணியில் ஈடுபடுகின்ற நூற்றுக்கணக்கான பெண் தொழிலாளர்களது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்துப் போராடியவர்.





ஹொட்டேல் பணிப் பெண்களின் சிறந்த ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் என்பவற்றுக்காக ஹொட்டேல் நிர்வாகத்துக்கு எதிராக 22 மாதங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்து வெற்றி கண்டவர். பணிப் பெண்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற் சங்கவாதியாகச் செயற்பட்ட அவர், மக்ரோன் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்துவந்த மஞ்சள் மேலங்கி இயக்கத்தின் ஆதரவாளராகவும் விளங்கினார்.





இந்த முறை தேர்தலில் ஜோன் லூக் மெலன்சோன் தலைமையிலான நியூப்ஸ் என்ற இடது சாரிகள் கூட்டணியில்(Nupes - Nouvelle Union Populaire Écologique et Sociale) பாரிஸின் புறநகரான Val-de-Marne ஏழாவது தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ரஷெல் கேக், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள்விளையாட்டுத் துறை அமைச்சரைத்
தோற்கடித்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.





ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் (Côte d'Ivoire-Ivory Coast) பிறந்தவர் ரஷெல். தனது 26 ஆவது வயதில் 2000 ஆம் ஆண்டில் அங்கிருந்து பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தவர். ஐந்து குழந்தைகளின் தாயாகிய அவர் 2015 இல்தான் பிரெஞ்சுக் குடியுரிமை பெற்றார்.





பாரிஸிலிருந்து குமாரதாஸன்