பிரான்ஸின் பிரதமர் நம்பிக்கை வாக்கில் வென்றார்!

banner

அதிபர் மக்ரோனின் சிறுபான்மை அரசின் பிரதமர் எலிசபெத் போர்னுக்கு எதிராக இடதுசாரிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கை வாக்கெடுப்பு பிரேரணை தோல்வியடைந்துள்ளது.





பிரான்ஸில் "Motion de censure" எனப்படுகின்ற அரசு மீதான அதிருப்தியால் அதனைத் தோற்கடிக்கும் இந்தப் பிரேரணை கடந்த வாரம் பிரதமர் எலிசபெத் போர்ன் தனது முதலாவது கொள்கை விளக்க உரையை ஆற்றுவதற்குச் சிறிது முன்னராக இடதுசாரிக் குழுவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.





சோசலிஸக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி பசுமைக் கட்சி என்பவற்றை இணைத்து தீவிர இடதுசாரியாகிய ஜோன் லூக் மெலன்சோன் நியூப்ஸ் (Nupes) என்ற பெயரில் அமைத்த இடதுசாரிக் கூட்டணி 151 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்தில் மிகப் பலமான பெரிய குழுவாக உள்ளது. அந்தக் குழுவினால் பிரதமருக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையேதோற்கடிக்கப்பட்டிருக்கிறது.





நியூப்ஸ் கூட்டணியின் 151 உறுப்பினர்களில் 146 பேரே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஆளும் கட்சி எம்பிக்கள் மற்றும் ரிப்பப்ளிக்கன் வலதுசாரி உறுப்பினர்கள், மக்ரோனின் பிரதான எதிராளியாகிய மரின் லூ பென்னின் தீவிர வலதுசாரிகள் உட்பட மிகப் பெரும்பான்மையாக 289 பேர் பிரேரணையை எதிர்த்து வாக்களித்திருப்பது குறிப்பிடத்தக்கது.





மக்களின் ஆதரவில் நிறுவப்படாத அரசை வீழ்த்துவோம் என்று கங்கணம் கட்டி இந்தப் பிரேரணையை முன்மொழிந்த ஜோன் லூக் மெலன்சோன் தரப்பினருக்கு இன்றைய வாக்கெடுப்பு பெரும் தோல்வியாக அமைந்துள்ளது.





தாஸ்நியூஸ் - பாரிஸ்