'கோட்டாவை காக்க வேண்டியது அரசின் கடமை' - மொட்டு கட்சி

banner

" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு, கட்சியின் தலைமையகத்தில் இன்று (01) நடைபெற்றது.





இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையில் செயற்படும் குழுவை, அவர்களின் பெயர்களை பட்டியலிடாது - மறைமுகமாக சாடினார் , பஸிலின் சகாவான செயலாளர் சாகர காரியவசம். டலஸ் அணிக்கு 'சூழ்ச்சிக் குழு' எனவும் அவர் பெயர் சூட்டினார்.





" கட்சியிலிருந்து சென்ற சிலர், நிலைமையை உணர்ந்து எம்மிடம் மன்னிப்பு கோரியுள்ளனர். மீள வருவது குறித்து பேச்சு நடத்துகின்றனர். இவர்கள் குறித்து எமக்கு பிரச்சினை இல்லை. எனினும் சூழ்ச்சிக்ககாரர்கள் நீக்கப்படுவார்கள். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்சி என்ற அடிப்படையில் நாம் முன்னோக்கி பயணிப்போம். சூழ்ச்சிக்காரர்கள் யாரென்பது நான் பெயர் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. அவர்கள் யாரென்பதும், அவர்களால் தவறாக வழிநடத்தப்பட்டவர்கள் யாரென்பதும் மக்களுக்கு தெரியும்." - என சாகர காரியவசம் சுட்டிக்காட்டினார்.





அதேவேளை, கோட்டாபய ராஜபக்ச இலங்கை பிரஜை. இங்கு வருவதற்கான உரிமை அவருக்கு உள்ளது. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.





ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவே, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது. சூழ்ச்சிக்காரர்களே, தலைமைப்பதவியில் மாற்றம் கோருகின்றனர் எனவும் சாகர காரியவசம் கடும் சீற்றத்தை வெளிப்படுத்தினார்.