'தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை' - நீதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு

banner

" எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையிலேயே தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் கையாளப்படும்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.





சர்வக்கட்சி அரசுக்காக ஜனாதிபதியிடம் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன, அதில் பிரதானமான ஒன்று தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார்.





இது தொடர்பில் நீதி அமைச்சரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.





" போரால் பகைமை ஏற்பட்டிருந்தது. அந்த பகைமையை கருணைமூலம் வெல்லவே நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை நல்லாட்சியின்போது மேற்கொள்ளப்பட்டது. சாட்சியங்கள் இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். சிலருக்கு பிணை வழங்கப்பட்டது.





விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டன. சிலருக்கு எதிராக பாரிய குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர்கள் தொடர்பிலும் தீர்மானம் எடுக்கப்படும். எந்தவொரு தரப்புக்கும் அநீதி இழைக்காத வகையில் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். " - எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.