கைது வேட்டையும், அடக்குமுறையும் தொடர்கின்றன

Politics 1 வருடம் முன்

banner

மூன்று வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிக்கு வந்த நிலையில், அரகலய போராட்டக்காரர்கள் மீதான கடுமையான அடக்குமுறை முடிவின்றி தொடர்கிறது. அதேவேளை அச்சம் மற்றும் எதேச்சாதிகார கைதுகள் அன்றாட நடைமுறையாகியுள்ள நிலையில், நேற்று (8) மாத்திரம் மூன்று கைதுகள் இடம்பெற்றுள்ளன.





போர்க்காலத்தில் இடம்பெற்ற கடத்தல்களை நினைவுபடுத்தும் விதமாக, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவரான மங்கள மத்துமகே, கொழும்பு பொது நூலகத்தின் அருகில் அடையாளம் தெரியாதவர்களால் முச்சக்கர வண்டியொன்றில் கடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.





அவர் கைது செய்யப்பட்டு பம்பலபிட்டியிலுள்ள கொழும்பு குற்றவியல் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் உறுதி செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.









இதனிடையே போராட்டக்காரர்கள் மீதான அடுக்குமுறைகள் மேலும் தொடரக் கூடும் என்ற அச்சத்தை எழுப்பும் விதமாக பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று மேலும் 32 ஆண்கள் மற்றும் பெண்களின் படங்களை வெளியிட்டுள்ளது.





இவை ஜூலை 9ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் செல்பி எடுத்துக்கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய பொலிஸ் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.





போராட்டக்காரர்கள் மீது தொடரும் அடக்குமுறையின் ஒரு பகுதியாக, இளைய செயற்பாட்டாளர்களில் ஒருவரான பத்தரமுல்லை கொஸ்வத்தையைச் சேர்ந்த பியத் நிகேஷல, கொழும்பு கொம்பெனித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.





இதேவேளை இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கெஸ்பேவ பகுதியில் ஏற்பாட்டாளர் கயான் டி மெல்லும் இன்று கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.





மே மாதம் 9 ஆம் திகதி பிலியந்தலை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் தொடர்புபட்டிருந்தார் என அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.





தொடரும் கைதுகளின் நடவடிக்கையாக இன்று பிற்பகல் கோ கோட்டா கம போராட்ட மையத்தில் நூலகம் ஒன்றை நடத்துவதில் ஈடுபட்டிருந்த இளம் போராட்டக்காரரான அம்பலாங்கொடையைச் சேர்ந்த சசிந்து சஹன் தாரகவும் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தால் அழைக்கப்பட்டு அங்கு சென்ற போது கைது செய்யப்பட்டார்.





இதனிடையே அரசு முன்னெடுக்கும் ஒடுக்குமுறையை நிறுத்தி, அவசரகாலச் சட்டத்தை விலக்கிக்கொள்ள வேண்டுமென்று சர்வமதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் முன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்ற போதே அவர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர். எதிர்ப்பை வெளிப்படுத்த மக்களுக்கு உள்ள ஜனநாயக உரிமையை அரசுமதித்து நடக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.





முன்னதாக, கொழும்பு சிறையொன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான ஜோசப் ஸ்டாலின் நேற்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த மே மாதம் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச பதிவியிலிருந்து நீக்கப்பட வேண்டுமென இடம்பெற்ற போராட்டத்தில் பங்குபெற்றமைக்காக அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.