நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்கிறது ஆஸி.!
நியூஸிலாந்து நாட்டின் தெற்கு தீவு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.7 ஆக பதிவானது. இதையடுத்து நிலநடுக்கம் உணரப்பட்ட சவுத்லாந்து மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேற்படி பகுதியில் வசிக்கும் மக்கள் கடற்கரை மற்றும் கடலோர பகுதிகளை தவிர்க்க வேண்டும் என அந்நாட்டின் தேசிய அவசரநிலை மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
இருப்பினும் சுனாமி பேரலை அபாயம் நியூசிலாந்துக்கு இல்லை என ஆஸ்திரேலிய தேசிய வானிலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் குறித்து மக்கள் சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளனர்.
கட்டிடங்கள் குலுங்கியதாக நியூஸிலாந்து நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சுமார் 4,700-க்கும் மேற்பட்ட மக்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக அந்த நாட்டின் நில அதிர்வு ஆய்வு மையமான ஜியோநெட் கூறியுள்ளது.
நியூஸிலாந்தின் துணை-அண்டார்டிக் தீவுகளின் வடக்கே, ஸ்னேரஸ் தீவுகளிலிருந்து வடமேற்கே சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் 33 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள நியூஸிலாந்து நில அதிர்வு அபாயம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.