பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீதான புதிய வரிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கமைய ஆஸ்திரேலிய பொருட்களுக்கு 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.
இதற்கிடையே, அவர் இறக்குமதி வரிகளை அதிகரித்து ஏனைய நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையிலேயே புதிய பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிவிப்பு விடுக்கப்பட்ட நாளானது அமெரிக்காவின் விடுதலை நாளென ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கையால் வர்த்தக போர் என்பது தொடங்கும் நிலை உருவாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்;களுக்கு 26 சதவீத வரியும், பங்களாதேஷில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்;களுக்கு 37 சதவீத வரியும் விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வியட்நானில் இருந்து பொருட்களுக்கு 46 சதவீதம், தாய்வான் பொருட்களுக்கு 32 சதவீதமும், ஜப்பான் பொருட்களுக்கு 24 சதவீதமும், தென்கொரியா பொருட்களுக்கு 25 சதவீதமும், தாய்லாந்து பொருட்களுக்கு 26 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்து, இந்தோனோஷியா, மலேஷியா, கம்போடியா, பிரிட்டன், தென்ஆப்ரிக்கா, பிரேசில் , சிங்கப்பூர், இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் மற்றும் சிலி ஆகிய நாடுகளுக்கும் வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவிலிருந்து இறைச்சி, மருந்து மற்றும் விவசாய பொருட்கள் அதிகளவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.