அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பு அணுகுமுறையானது உலகப் பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆஸ்திரேலிய பொருட்கள்மீதான அமெரிக்காவின் 10 சதவீத வரி விதிப்பு சிறந்த நடவடிக்கை அல்ல எனவும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் 2005 ஆம் ஆண்டு சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
இதற்கமைய ஆஸ்திரேலிய பொருட்கள் வரிகளின்றி அமெரிக்க சந்தைக்கு செல்கின்றன. அதேபோல அமெரிக்க பொருட்கள் வரிகள் இல்லாமல் ஆஸ்திரேலிய சந்தைக்கு வருகின்றன.
எனினும், புதிய வரி விதிப்புக்குள் ஆஸ்திரேலியாவையும் ட்ரம்ப் உள்ளடக்கியுள்ளார். ஆனால் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்திரேலியாவுக்கே குறைந்தளவு வரி விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
' வரி விதிப்புகளை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், எந்தவொரு நாட்டுக்கும் சலுகை கிடைக்கப்பெறவில்லை. இது நல்ல விடயமும் அல்ல. ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இந்த வழியில் பயணிப்பதில் உறுதியாக இருக்கின்றார்." என்று ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்தார்.
அத்துடன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கப்போவதில்லை எனவும் பிரதமர் கூறினார்.
ட்ரம்பின் பரஸ்பர வரி விதிப்பானது அமெரிக்கர்களுக்கும் பாதிப்பாக அமையும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆஸ்திரேலியாவை தாம் தனிமைப்படுத்தவில்லை எனவும், பரஸ்பர நடவடிக்கையாகவே வரி விதிக்கப்படுகின்றது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.