தேர்தல் பிரச்சாரத்தின்போது மேடையில் தவறி விழுந்த பிரதமர் அந்தோனி அல்பானீஸி, உடனடியாக சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்றார். இது தொடர்பான படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் எதிர்வரும் மே 3 ஆம் திகதி கூட்டாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு லேபர் கட்சியின் தலைவரான பிரதமர் தீவிர பரப்புரைகளில் ஈடுபட்டுவருகின்றார்.
இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸில் நேற்று நடைபெற்ற சுரங்க மற்றும் எரிசக்தி தொழிற்சங்க மாநாட்டில் தனது பேச்சை முடித்துவிட்டு, குழு படத்துக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்தபோது, கால் இடறி கீழே சாய்ந்தார். சுதாரித்துக்கொண்ட அவர், விரைவாக மீண்டார்.
இந்த சம்பவம் வீடியோவில் பதிவாகி இருந்தது, அதில் பிரதமர் சமாளித்து, சிரித்துக்கொண்டே எழுந்ததைக் காண முடிந்தது. உடனடியாக எழுந்து நின்று, கூட்டத்தினரை நோக்கி, தான் நலமாக இருப்பதாக இரு கைகளையும் நீட்டி சைகை செய்தார்.