பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் வான்வழி தாக்குதலை இந்திய இராணுவம் இன்று முன்னெடுத்தது.
பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 22-ம் திகதி காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதன்காரணமாக இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையிலேயே இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் எட்டுபேர்வரை கொல்லப்பட்டுள்ளனர் என்று பாகிஸ்தான் தரப்பு தகவல் தெரிவிக்கின்றது.
இந்திய இராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பாகிஸ்தான் தான் விரும்பும் நேரத்திலும், இடத்திலும் தக்க பதிலடி கொடுக்கும் என்று அந்நாட்டு இராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் மூண்டுள்ள போர் தொடர்பில் ஆஸ்திரேலியா கழுகுப்பார்வை செலுத்தியுள்ளது.
மேற்படி தாக்குதல் தொடர்பில் உலக நாடுகளுக்கு இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகள் தெளிவுபடுத்திவருகின்றனர்.
அமெரிக்கா, பிரிட்டன், சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா தொடர்பில் பயண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. குவாட் பாதுகாப்பு அமைப்பில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் அங்கம் வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.