கிறீன்ஸ் கட்சி தலைவரை தெரிவு செய்வதற்கான கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
2020 ஆம் ஆண்டு முதல் கிறீன்ஸ் கட்சியை வழிநடத்திய ஆடம் பேண்ட், மே 3 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
2010 ஆம் ஆண்டு முதல் அவர் தக்கவைத்துவந்த மெல்பேர்ண் தொகுதியில் இம்முறை பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையிலேயே புதிய தலைவர் நியமனம் குறித்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.
'கிறீன்ஸ் கட்சியில் பல தலைவர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவர் நிச்சயம் தெரிவுசெய்யப்படுவார்." என்று செனட்டர் மெக்கிம் தெரிவித்தார்.
அத்துடன், தலைமைப்பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெஹ்ரீன் பரூகி, சாரா ஹன்சன் யங் ஆகியோர் தலைமைப்பதவிக்கு போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பரூகி நியூ சவூத் வேல்ஸின் துணை தலைவராகவும், செனட்டராகவும் செயற்படுகின்றார். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். ஆஸி. நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதல் முஸ்லிம் பெண் அரசியல்வாதி இவரென்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, லிபரல் கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தெரிவுசெய்யப்படவுள்ளார். இதற்கான வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.