உக்ரைனுக்காக போராடிய நிலையில் கைது செய்யப்பட்டு ரஷ்யாவில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய பிரஜையை விடுவித்துக்கொள்வதற்குரிய தீவிர முயற்சியில் ஆஸ்திரேலியா இறங்கியுள்ளது.
ஒஸ்கார் ஜென்கின்ஸ் என்பவர் உக்ரைன் படையில் இணைந்து ரஷ்யாவுக்கு எதிராக போரிட்டார்.
இந்நிலையில் ரஷ்யாவால் அவர் கைது செய்யப்பட்டார். அவரை ரஷ்ய தரப்பு தாக்கும் காணொளிகூட வெளியாகி இருந்தது. ஆரம்பத்தில் அவர் கொல்லப்பட்டுவிட்டார் என தகவல் வெளியானது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா இராஜதந்திர ரீதியில் தலையிட்டதால் ஒஸ்கார் ஜென்கின்ஸ் உயிருடன் உள்ளார் என்ற தகவலை ரஷ்யா வழங்கியது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் அண்மையில் அவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான கைதிகள் பரிமாற்ற திட்டத்தின்கீழ் ஒஸ்கார் ஜென்கின்ஸை விடுவித்துக்கொள்வதற்கு ஆஸ்திரேலியா முயற்சிக்கின்றது.
வத்திக்கானுக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய பிரதமர், இது சம்பந்தமாக உக்ரைன் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அதேவேளை, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான அமைதி முயற்சியை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.