மே 3 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், 80 நாட்களுக்கு பிறகு எதிர்வரும் ஜுலை 22 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது.
பிரதமர் அந்தோனி அல்பானீஸி இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். இது தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு பிரதமர் அனுப்பி வைத்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் 150 எம்.பிக்களும், 76 செனட்டர்களும் இடம்பெறுவார்கள்.
லேபர் கட்சி நாடாளுமன்றத்தில் 93 எம்.பிக்களைப் பெற்றுள்ளது. லிபரல் கட்சி சார்பில் 28 எம்.பிக்களும், நெஷனல்ஸ் கட்சி சார்பில் 15 எம்.பிக்களும் தெரிவாகியுள்ளனர்.
கீறின்ஸ் கட்சி மற்றும் லிபரல் கட்சிக்கு தலைமைப்பதவியை வகித்தவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தமது தொகுதிகளில் தோல்வியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அக்கட்சிகளுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சிரேஷ்ட அரசியல்வாதிகள் பலர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. அவர்களில் பலர் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டனர்.
நாடாளுமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பீட்டர் டட்டன் மற்றும் ஆடம் பேண்ட் ஆகியோர் வலுவான குரலாக ஒலித்து வந்தனர். இப்படியான பெரும் புள்ளிகள் இல்லாத நிலையிலேயே புதிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது.