லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சபதம் விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு போராட்டங்கள் வெடித்தன.
அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் தொடர்ந்து 5வது நாளாக போராட்டங்கள் தொடர்வதால், வன்முறையை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
“ லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை கும்பல்கள் ஆக்கிரமித்துள்ளனர். ஒரு காலத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் தூய்மையான, பாதுகாப்பான, அழகான நகரமாக இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸை வெளிநாட்டு எதிரியின் படையெடுப்பிலிருந்து விடுவிப்பேன்.
அவர்களின் பிடியில் இருந்து நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸை விடுவித்து அதை மீண்டும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் மாற்றுவோம். நமது ராணுவ வீரர்கள் கலிபோர்னியாவின் நேர்மையான குடிமக்களை பாதுகாப்பார்கள்.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, லாஸ் ஏஞ்சல்ஸ் கலவரம் பற்றி செய்தி சேகரித்து நேரலையில் வழங்கிக் கொண்டிருந்த ஆஸ்திரேலியாவின் பெண் நிருபர் காலில் அமெரிக்க காவல்துறை ரப்பர் புல்லட் கொண்டு சுட்ட விவகாரமும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இச்சம்பவத்தை ஆஸ்திரேலியா ஏற்கனவே வன்மையாகக் கண்டித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நிருபருக்கு தூதரக உதவிகள் வழங்கப்பட்டுவருகின்றன என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் தெரிவித்தார்.
ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், எந்த சந்தர்ப்பத்திலும் ஊடகவியலாளர்கள்மீது கைவைக்ககூடாதெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜி – 7 மாநாட்டின்போது இவ்விவகாரம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதியிடம், ஆஸ்திரேலிய பிரதமர் கேள்வி எழுப்புவாரா என்ற கேள்விக்கு, அல்பானீஸி சிறந்த இராஜதந்திரி என வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் பதிலளித்துள்ளார்.