பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுப்பதற்காக ஆஸ்திரேலியா பெடரல் பொலிசுக்கும், இலங்கை பொலிசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இலங்கையின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
பயங்கரவாதம், இணையவழிக் குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல், மனிதக் கடத்தல் மற்றும் வேறு விதத்திலான திட்டமிட்ட மற்றும் சர்வதேச குற்றங்களால் ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்வதில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புரிந்துணர்வுடன் செயற்பட்டுவருகின்றன.
இந்நிலையில் சர்வதேச திட்டமிட்ட குற்றங்களைத் தடுத்தல், ஒருங்கிணைந்த சட்டவிதிப்புக்களை மேம்படுத்தல், தற்போதுள்ள ஒத்துழைப்புப் பணிச்சட்டகங்களைப் பலப்படுத்தல், தகவல் மேம்பாடு மற்றும் அறிவுப் பரிமாற்றம் செய்தல் போன்ற நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.