ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளமான அல் உதெய்த் விமானத் தளத்தின் மீது நேற்று இரவு ஈரான் பல ஏவுகணைகளை ஏவி தாக்கியுள்ளது.
எனினும், ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக கத்தாரும், அமெரிக்காவும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் பதிவில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
' இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
சுமார் 6 மணி நேரத்தில், இஸ்ரேலும் ஈரானும் தங்கள் இறுதிப் பணிகளை முடித்த பிறகு 12 மணிநேர போர் நிறுத்தம் தொடங்கும். அப்போது போர் முடிந்ததாக கருதப்படும்.
ஒவ்வொரு போர் நிறுத்தத்தின் போதும், மறுபக்கம் அமைதியாகவும் மரியாதையுடனும் இருக்கும். இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் முடிவுக்கு வருவதற்கான சகிப்புத்தன்மை, தைரியம் பெற்றதற்கு நான் வாழ்த்த விரும்புகிறேன்." - என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையில் போர் நிறுத்த அறிவிப்பை ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனீ அல்பானீஸி வரவேற்றுள்ளார். உண்மையான போர் நிறுத்தத்தை காண விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் அமுலுக்கு வரவில்லை. போர் நிறுத்தம் தொடர்பாகவோ, ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகவோ எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடர்கிறது என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
'போர் நிறுத்தம் குறித்து இறுதி முடிவை இன்னும் எடுக்கவில்லை. தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்த தயார்." - எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பிரதமருடன் ஜனாதிபதி டிரம்ப் நேரடியாக பேச்சு நடத்தி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் நாட்டின் தலைவர்களுடன் கத்தார் நாட்டின் தலைவர்கள் நேரடியாக பேசி போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொள்ள வைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈரான் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்வோம் என்று இஸ்ரேல் பிரதமரும், இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்திக் கொள்வோம் என்று ஈரான் வெளியுறவு அமைச்சரும் உறுதி அளித்துள்ளனர்.
எனினும் இரு நாட்டினரும் இது பற்றி வெளிப்படையாக எதுவும் அறிவிக்கவில்லை. இதனால் போர் நிறுத்தம் அமுலுக்கு வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.