ஆஸ்திரேலியா பாதுகாப்பு செலவீனங்களை அதிகரிக்க வேண்டும் என நேட்டோ முன்வைத்துள்ள கோரிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
மொத்த தேசிய உற்பத்தியில் பாதுகாப்புக்கு 5 சதவீதம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற நேட்டோவின் யோசனை உலக பொருளாதாரத்தில் நியாயமற்ற தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, நேட்டோ கூட்டணியின் அடிச்சுவடுகளை ஆஸ்திரேலியா பின்பற்றக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா மொத்த தேசிய உற்பத்தியில் 2 சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிடுகின்றது. இதனை 2.4 சதவீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், நேட்டோவால் முன்வைக்கப்பட்டுள்ள 3.5 சதவீத யோசனைக்கு ஆஸ்திரேலியா இன்னும் பச்சைக்கொடி காட்டவில்லை.
இந்நிலையிலேயே நேட்டோவின் யோசனையை ஆஸ்திரேலியா ஏற்கக்கூடாது என சீனத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
" சீனாவும் ஆஸ்திரேலியாவும் நண்பர்கள், எதிரிகள் அல்லர். சீனா எப்போதும் மிகுந்த நேர்மையுடனும் பொறுமையுடனும் இருதரப்பு நட்பையும் ஒத்துழைப்பையும் வளர்த்து வருகிறது, மேலும் ஆஸ்திரேலியா அதே திசையில் எங்களுடன் செயல்படும் என நம்புகின்றோம்." - எனவும் ஆஸ்திரேலியாவுக்கான சீனத் தூதுவர் குறிப்பிட்டார்.