ஆஸ்திரேலியாவின் தேசிய விமான சேவை நிறுவனமான குவாண்டாஸ்மீது சைபர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் நபர், விமான நிறுவனத்தை தொடர்பு கொண்டுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
அவர் தொடர்பில் கூட்டாட்சி பொலிஸார் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளனர்.
சைபர் தாக்குதல் மூலம் 60 லட்சம் வாடிக்கையாளர்களின் தகவல்கள் களவாடப்பட்டிருந்தன.
வாடிக்கையாளர்களின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள், பிறந்த திகதிகள், பயண விபரம் உள்ளிட்ட விடயங்களே இவ்வாறு களவாடப்பட்டிருந்தன.
" சைபர் குற்றவாளி எம்மை தொடர்பு கொண்டுள்ளார். அது தொடர்பில் நடவடிக்கை இடம்பெற்றுவருகின்றது.
திருடப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டதற்குரிய எவ்வித ஆதாரமும் இல்லை. எனினும், சைபர் பாதுகாப்பு நிபுணர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து கண்காணிப்பு இடம்பெறுகின்றது." - என்று குவாண்டாஸ் நிறுவன பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன் பின்னணியில் செயற்பட்டது யார் என்ற தகவலை நிறுவனம் வெளியிடவில்லை. தாக்குதல் தொடர்பில் எந்தவொரு குழுவும் பொறுப்பேற்கவும் இல்லை.