ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
சீன பிரதமர் லி கியாங்கின் அழைப்பின் பிரகாரம் பீஜிங் செல்லும் ஆஸி. பிரதமர், 18 ஆம் திகதிவரை அங்கு தங்கி இருப்பார் என தெரியவருகின்றது.
ஆஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் வருடாந்த மாநாட்டு கூட்டமும் நடைபெறவுள்ளது.
சீன ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்களுடன் பிரதமர் அல்பானீஸி பேச்சுகளை நடத்தவுள்ளார்.
பொருளாதாரம், சுற்றுலா மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் கலந்துரையாடவுள்ளனர்.
குறித்த விஜயத்தின்போது சீனாவின் பல பகுதிகளுக்கும் பிரதமர் செல்லவுள்ளார். முதலீட்டு மாநாடுகளையும் நடத்தவுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதமர் அல்பானீஸி சீனா சென்றிருந்தார். இது அவரது இரண்டாவது விஜயமாகும்.
அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு மத்தியில் ஆஸி. பிரதமரின் பீஜிங் விஜயம் தொடர்பில் வாஷிங்டன் கழுகுப்பார்வை செலுத்தியுள்ளது.
சீனாவுக்கு எதிரான கூட்டணியாகக் கருதப்படும் குவாட் அமைப்பில் ஆஸ்திரேலியா அங்கம் வகிக்கின்றது. அமெரிக்காவும் அக்கூட்டணியில் உள்ளது.