யூத விரோதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிறுவனங்களுக்குரிய அரச நிதி ஒதுக்கீடு நிறுத்தப்பட வேண்டும் எனவும், யூத விரோதக் கருத்துகள் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதை தடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
யூத எதிர்ப்பு சம்பவங்களைக் கையாள்வதற்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புத் தூதுவர் ஜிலியன் செகலால் வெளியிடப்பட்டுள்ள பரிந்துரை அறிக்கையிலேயே இவ்விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது.
20 பக்கங்கள் கொண்ட மேற்படி அறிக்கையில் பிரதமர் அந்தோனி அல்பானீஸி இன்று வெளியிட்டார்.
ஒக்டோபர் 7 தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு ஆஸ்திரேலியாவில் யூத எதிர்ப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ளன எனவும், கடந்த வருடத்தைவிட இவ்வருடம் அது மும்மடங்காக அதிகரித்துள்ளது எனவும் சிறப்பு தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இப்படியான வெறுக்கத்தக்க செயற்பாடுகளை எதிர்த்து போராடுவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
யூத கலாசார விழாக்களை நடத்துவதற்கு அரசாங்கம் அனுசரணை வழங்க வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பரிந்துரை அறிக்கை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என பிரதமர் அந்தோனி அல்பானீஸி உறுதியளித்துள்ளார்.