2030 ஆம் ஆண்டுக்குள் 12 லட்சம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை லேபர் அரசால் அடைய முடியுமென பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
குறித்தொகுக்கப்பட்ட காலத்துக்குள் மேற்படி இலக்கை அடைய முடியாது என கருவூலத்துறையால், அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறும் ஆவணங்களை ஊடகமொன்று வெளியிட்டுள்ளது.
அத்துடன், பாதீட்டை நிலையாக பேண வேண்டுமெனில் வரிகளை அதிகரிக்க வேண்டும் எனவும், செலவீனங்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது எனவும் அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே பொருளாளர் மேற்கண்டவாறு நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
வீட்டுப் பிரச்சினையானது ஆஸ்திரேலியப் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று எனவும் பாதீட்டை மேலும் நிலையானதாக மாற்ற வரிகளை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார நிபுணர்கள் மற்றும் தொழிற்சால் வல்லுனர்கள், லேபர் கட்சி அதன் இலக்குகளைத் அடைய முடியாத சூழ்நிலை ஏற்படக்கூடும் எச்சரித்திருந்தாலும், டெலாய்ட் அக்சஸ் எகனாமிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம், 2029 ஆம் ஆண்டளவில் 10 லட்சம் வீடுகள் என்ற இலக்கை அடைய முடியும் எனக் கணித்துள்ளது.
தனது வாக்குறுதியை நிறைவேற்ற, லேபர் கட்சி வருடாந்தம் சராசரியாக 2லட்சத்து 40 ஆயிரம் புதிய வீடுகள் நிர்மாணிக்க வேண்டும். 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் மட்டுமே அந்த இலக்கை அடையக்கூடியதாக இருந்துள்ளது. 2023 இல் ஒரு லட்சத்து 73 ஆயிரம் வீடுகளே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.