காசாவிலுள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயமான ஹோலி ஃபேமிலி தேவாலயம்மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மூவர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர்.
பாலஸ்தீனத்தின் நிலைமை தொடர்பில் பரிசுத்த பாப்பரசருக்கு தகவல்கள் வழங்கி வந்த விகார் ஜெனரல் பாதிரியார் கேப்ரியல் ரோமானெல்லி இந்த குண்டுவீச்சில் காயமடைந்தார். அவரது காலில் காயம் ஏற்பட்டது.
போப் லியோ இந்தத் தாக்குதலைக் கண்டித்து, காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்தார்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தாக்குதல் குறித்து விசாரித்து வருவதாகக் கூறின. தேவாலயம் அழிக்கப்பட்டதற்கு இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.
இதற்கிடையே கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 29 பேர் கொல்லப்பட்டனர். இதன் மூலம், காசாவில் கொல்லப்பட்ட மொத்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 58 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது.
அதேவேளை, காசாவில் சிவில் அமைப்புகள் மற்றும் பொது இடங்களில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்களை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துவருகின்றது.
அத்துடன், மனிதாபிமான பணியாளர்கள் உட்பட சிவிலியன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்பன சர்வதேச சட்டங்களை பின்பற்ற வேண்டும் எனவும் ஆஸி . வலியுறுத்திவருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.