மத்திய குயின்ஸ்லாந்தில் நேற்று இடம்பெற்ற பயங்கர வாகன விபத்தில் தாயொருவர் தனது இரு குழந்தைகளையும், வருங்கால துணையையும் இழந்து தவிக்கின்றார்.
இவர்கள் பயணித்த காரும், மற்றுமொரு வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 6 மற்றும் 7 வயதுடைய சிறார்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
காரில் இருந்த மேலும் ஒரு நபரும் உயிரிழந்தார். அவர் மேற்படி தாயின் வருங்கால துணையெனக் கூறப்படுகின்றது.
தாய் இவர்களுக்கு பின்னால் மற்றுமொரு வாகனத்திலேயே வந்துள்ளார் எனவும், விடுமுறையை கழித்துவிட்டு வீடு திரும்பும்போதே விபத்து இடம்பெற்றுள்ளது எனவும் கூறப்படுகின்றது.
விபத்துக்குள்ளான மற்றைய வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வார இறுதியில் குயின்ஸ்லாந்திலுள்ள வீதிகளில் இடம்பெற்ற ஐந்து விபத்துகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துகளால் 158 பேர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 15 சதவீத அதிகரிப்பாகும்.