மேற்கு சிட்னியில் தமிழ்ப் பெண்ணொருவர் கொல்லப்பட்ட சம்பவம் இலக்கு வைக்கப்பட்ட கொலையென மரண விசாரணை அதிகாரி கண்டறிந்துள்ளார்.
இது தொடர்பில் நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்பட்டு, விசாரணை நடவடிக்கை புதிய பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் மென்பொருள் பொறியியலாளராக பணியாற்றிய இந்திய பெண் பிரபா 2015 மார்ச் 7 ஆம் திகதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிட்னி புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மேட் பகுதியில் தங்கியிருந்த அவர் தினமும் ரயிலில் பணிக்குச் சென்று வந்துள்ளார்.
வழக்கம்போல மார்ச் 7 ஆம் திகதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
பாராமட்டா ரயில் நிலையத்தில் இறங்கி அவரது வீடு அமைந்துள்ள வெஸ்ட்மேட் பகுதிக்கு இரவு 9.30 மணி அளவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பிரபா, இந்தியாவில் இருந்த தனது கணவர் அருண்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
அருண்குமார் சிட்னியில் உள்ள அயல் வீட்டுக்காரர் அரவிந்துக்கு தகவல் கொடுத்தார். அரவிந்தும் அப்பகுதி மக்களும் விரைந்து வந்து பிரபாவை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அவரது கழுத்து, மார்பு பகுதிகளில் கத்திக் குத்து காயங்கள் இருந்தன. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதால் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.
வீட்டில் இருந்து 300 மீட்டர் தொலைவில்தான் பிரபா கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவந்தன. இந்நிலையில் இது இலக்கு வைக்கப்பட்ட கொலைச் சம்பவம் என பொலிஸார் நீதிமன்றத்துக்கு இன்று தெரியப்படுத்தியுள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர் அல்லது நபர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கொலைச் சம்பவம் தொடர்பான விசாரணை பொறுப்பு நியூ சவூத் வேல்ஸ் பொலிஸின், தீர்க்கப்படாத கொலை விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பிரபாவின் மரணம் தொடர்பான சந்தேக நபர் அல்லது நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு ஒரு மில்லியன் டொலர்கள் சன்மானம் வழங்கப்படும் என்ற அறிவித்தல் இன்னும் நடைமுறையில் உள்ளது.