பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.
போர் நிறுத்த பேச்சுகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக, அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்தார்.
'மத்திய கிழக்கில் அமைதிக்கான வரலாற்று உறுதிப்பாட்டிற்கு இணங்க, பிரான்ஸ் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும். வரும் செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக்கு முன் இந்த அறிவிப்பை வெளியிடுவேன்.
காசாவில் போரை முடிவுக்குக் கொண்டு வந்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இன்றைய அவசர முன்னுரிமை. அமைதி சாத்தியம். உடனடி போர்நிறுத்தம் செய்து, அனைத்து பிணை கைதிகளையும் விடுவிக்க வேண்டும். காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவை." - எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பாலஸ்தீன மக்களின் சொந்த அரசுக்கான நியாயமான அபிலாஷைகளை ஆஸ்திரேலியா அங்கீகரிக்கின்றது என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸி விசேட அறிக்கையொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.
இரு அரசு தீர்வு சர்வதேச சமூகத்தின் இலக்காக இருப்பதற்குக் காரணம், ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதி அதைச் சார்ந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
'அப்பாவி மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கவும், காசா மக்களின் துன்பத்தையும் பட்டினியையும் முடிவுக்குக் கொண்டுவரவும் எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்.
போர்நிறுத்தத்தை எளிதாக்குவதற்கான அனைத்து சர்வதேச முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்." எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி மேற்படி அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளார்.