தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகள் நிபந்தனையற்ற உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளன.
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தாய்லாந்தின் தற்காலிகப் பிரதமர் பும்தம் வெச்சயாசாய் மற்றும் கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட் ஆகியோர் மலேசியாவின் புத்ரஜெயாவில் உள்ள பிரதமர் அன்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று போர்நிறுத்தப் பேச்சில் ஈடுபட்டனர்.
இதன்போதே இவ்வாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து கம்போடியா மற்றும் தாய்லாந்து தலைவர்களுடன் இணைந்து கருத்து வெளியிட்ட மலேசிய பிரதமர் அன்வர், “கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையே மிகவும் நேர்மறையான முன்னேற்றத்தை காணும் வகையில் நல்ல முடிவுகளை நாங்கள் கண்டிருக்கிறோம்.” என்று அறிவித்தார்.
அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடனும் இணைந்து மோதலுக்கு அமைதியான தீர்வைக் காண மலேசியா நெருங்கிய தொடர்பில் உள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதற்கமைய நேற்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது.
இது இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தைத் தணிப்பதற்கும், அமைதி மற்றும் பாதுகாப்பை மீட்டெடுப்பதற்குமான நடவடிக்கையில் முதல் படியாக கருதப்படுகின்றது.
கடந்த 24 ஆம் திகதி எல்லையில் ஏற்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 5 தாய்லாந்து படையினர் காயமடைந்ததைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் வெடித்தது. கடந்த 5 நாட்களாக நீடித்த இந்த போரில் இருதரப்பிலும் இதுவரை 35 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, கம்போடியா மற்றும் தாய்லாந்து இடையேயான உடனடி மற்றும் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
போர் நிறுத்தத்துக்கு இரு தரப்பினரும் மதிப்பளித்து, நீடித்த மற்றும் அமைதியான தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என ஆஸ்திரேலியா அழைப்பு விடுக்கின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் குறிப்பிட்டார்.
போர் நிறுத்தத்துக்காக ஆசியான் தலைவராக மலேசிய பிரதமர் அன்வர் மற்றும் ஜனாதிபதி டிரம்ப் வகித்த பங்களிப்பை பாராட்டுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.