தமது சில நிபந்தனைகளை இஸ்ரேல் ஏற்காவிட்டால் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம் வழங்கப்படும் என பிரிட்டன் அறிவித்துள்ளது.
' காசாவில் நிலவும் கொடுமையான நிலையை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உடனடி போர் நிறுத்தம் மற்றும் நீண்டகால அமைதியை உறுதிப்படுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு இல்லையேல் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படும்." - என்று பிரிட்டன் பிரதமர் பிரதமர் கெய்ர் ஸ்டாமெர் தெரிவித்தார்.
பாதுகாப்பான மற்றும் நிலையான இஸ்ரேல் மற்றும் சுதந்திரமான பாலஸ்தீனம் ஆகிய இரண்டையும் உருவாக்குவதே எமது நோக்கம் எனவும் அவர் கூறினார்.
உலகில் சில நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. எனினும், ஜி - 7 உள்ளிட்ட நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில் பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்படும் என பிரான்ஸ் அறிவித்திருந்தது. இதனையடுத்தே பிரிட்டன் தரப்பில் இருந்தும் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதேவேளை, பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பது தொடர்பில் பரிசீலித்துவரும் ஆஸ்திரேலியா, அது தொடர்பில் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை.
எனினும், பாலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ள 14 நாடுகளால் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
ஆஸ்திரேலியா நட்பு நாடுகளுடன் இணைந்து செயற்படும் எனவும், பாலஸ்தீன விவகாரத்தில் காலக்கெடு எதையும் விதிப்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லi எனவும் பிரதமர் அந்தோனி அல்பானீஸி தெரிவித்தார்.