தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அரசியல்வாதிக்கு ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரின் விசா விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
காசாவிலுள்ள குழந்தைகளை எதிரிகள் என விமர்சித்தவரும், மேற்கு கரையை இஸ்ரேல் முழுமையாக கைப்பற்ற வேண்டும் என வலியுறுத்தியவருமான சிம்சா ரோத்மேன் என்பவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னி மற்றும் மெல்பேர்ணில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இவர் இம்மாதம் ஆஸ்திரேலியா வருவதற்கு திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில் அவர் விசா கோரி விண்ணப்பித்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
' எங்கள் நாட்டிற்கு வந்து பிரிவினையை பரப்ப முயற்சிக்கும் மக்கள் மீது எங்கள் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறது" என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் விசா கோரி விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவை ஆஸ்திரேலியா எடுத்துள்ள நிலையில், அதற்கு இஸ்ரேல் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.