உக்ரைனின் மேலும் இரு கிராமங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளதாக, அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், இப்போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன், அமெரிக்க ஜனாதிபதி டொனாலட் டிரம்ப் சமீபத்தில் பேச்சு நடத்தினார்.
இதில் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, ரஷ்யா - உக்ரைன் இடையே தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைன் பகுதிகளில் தொடர்ந்து முன்னேறி வருவதாக, அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களான செரெட்னே மற்றும் கிளெபன் பைக் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், உக்ரைனின், 34வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த நேரத்தில், மேற்கு குர்ஸ் பகுதியில் உள்ள அணு மின் நிலையம் மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக, ரஷ்யா கூறியுள்ளது.
அதேவேளை, உக்ரைன் தனது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வேளையில், உக்ரைன் மக்களின் தைரியத்தையும், மீள்தன்மையையும் நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ரஷ்யாவின் மிருகத்தனமான மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்பை எதிர்கொள்ளும் போது ஆஸ்திரேலியா உக்ரைனுடன் நிற்கிறது என வெளிவிவகார அமைச்சர் பெனி வோங் அறிவித்துள்ளார். உக்ரைனுக்கு ஒரு நியாயமான மற்றும் நீடித்த அமைதியை ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆதரிக்கும் எனவும் அவர் கூறினார்.