இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்த நபரை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது. அத்துடன், மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
42 வயதான பெண்ணும், 15 வயது சிறுவன் ஒருவருமே விக்டோரியா நகரிலுள்ள வீட்டில் வைத்து நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் துப்பாக்கி தாரியின் மனைவி மற்றும் மகன் என தெரிவிக்கப்படுகின்றது. பல மணிநேர விசாரணைகளின் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிக்கும் குழுவை சேர்ந்தவர் என்பதால் காடுகளில் தலைமறைவாக பதுங்கி இருப்பது பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தேடுதல் விமானங்கள், ட்ரோன்கள் மூலம் நடவடிக்கை தொடர்கின்றது. ஆயுதம் தாங்கிய படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
விக்டோரியாவில் போரேபுன்கா நகரிலுள்ள வீடொன்றுக்கு வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டை நிறைவேற்றுவதற்கு பொலிஸார் சென்றிருந்தவேளையிலேயே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.