விக்டோரிய மாநில பிரிமியர் ஜசிந்தா ஆலன் ஊடக சந்திப்பை நடத்திக் கொண்டிருக்கையில், நவ நாஜிகள் குழு தலைவர் அவ்விடத்துக்கு வந்து ஆக்ரோஷ மாக நடந்துகொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஊடக சந்திப்பை நிறுத்திவிட்டு அங்கிருந்து பிரிமியர் வெளியேற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
வீட்டிலிருந்து வேலை செய்வது பற்றிய சட்டதிருத்தம் குறித்து மேற்கு மெல்பேர்ணிலுள்ள பூங்காவொன்றில் இருந்து பிரிமியர் ஊடகங்களுக்கு இன்று கருத்து வெளியிட்டார்.
அப்போது அவ்விடத்துக்கு தனது சகாக்கள் சகிதம் நவ - நாஜிகள் குழு தலைவர் வந்தார்.
பாதுகாப்பு அதிகாரியொருவர் அவர்களை தடுத்தார். எனினும், முஷ்டியை முறுக்கியபடி - சத்தமிட்டவாறு அவர் முன்னோக்கி வந்தார். பிரிமியர்மீது கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதனையடுத்து பிரிமியர் அங்கிருந்து வெளியேறினார்.
வெளிநாட்டினரின் குடியேற்றத்தை தடுக்குமாறு வலியுறுத்தி ஆஸ்திரேலியாவில் பிரதான நகரங்களில் நேற்று முன்தினம் போராட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. நவ நாஜிகளால் இதற்குரிய ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்த நடவடிக்கையை பிரிமியர் கடுமையாக விமர்சித்திருந்த நிலையிலேயே அவரை கோழையென நவநாஜிகள் குழு தலைவர் விமர்சித்துள்ளார்.
நவநாஜிகள் குழுவுக்கு தான் அஞ்சவில்லை எனவும், அவர்கள் குண்டர் குழு எனவும் பிரிமியர் ஜசிந்தா பதிலடி கொடுத்துள்ளார். அத்துடன், பிரதமர் அந்தோனி அல்பானிசியும் இச்சம்பவத்தைக் கண்டித்துள்ளார்.