ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் - எல்ல, வெல்லவாய வீதியில் நேற்றிரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
எல்ல 24 ஆம் கட்டை பகுதியில் சுமார் 700 அடி பள்ளத்தில் குறித்த பஸ் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
பஸ் விபத்துக்குள்ளாகும்போது அதில் 36 பேர் பயணித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை நகரசபை ஊழியர்கள் சென்ற சுற்றுலா பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுற்றுலாவை முடித்துக்கொண்டு வீடு திரும்பும் வழியிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது.
சிறார்கள், பெண்கள் உட்பட 15 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஓரிருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
படையினர், பொலிஸார், பிரதேச மக்கள் இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெறுகின்றன.