நியூசிலாந்தை பூர்வீகமாகக்கொண்ட - ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்றுள்ள நவ - நாஜிகள் தலைவர் தாமஸ் செவெல் மோசமான மனிதர் என்று நியூசிலாந்து பிரதமர் விமர்சித்துள்ளார்.
எனினும், அவரை ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்துக்கு நாடு கடத்த வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு நியூசி பிரதமர் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
பூர்வக்குடி மக்கள்மீது தாக்குதல் நடத்திய நவ - நாஜிகள் தலைவரின் குடியுரிமையை இரத்து, அவரை நியூசிலாந்துக்கு நாடு கடத்துமாறுகோரும் ஒன்லைன் மனுவில் ஒரு லட்சம்பேர்வரை கையெழுத்திட்டுள்ளனர்.
இது பற்றி வினவப்பட்டபோது, இது ஆஸ்திரேலியா கையாள வேண்டிய விவகாரம் என பிரதமர் பதிலளித்துள்ளார்.
நியூசிலாந்தில் பிறந்த நவ - நாஜிகள் தலைவர் தாமஸ் செவெல், 2012 முதல் 2014 வரை ஆஸ்திரேலியா இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்னர் தீவிர வலதுசாரி மற்றும் வெள்ளை மேலாதிக்க அமைப்புகளின் முக்கிய நபராக செயற்பட்டுவருகின்றார்.
ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நபரின், குடியுரிமையை இரத்து செய்ய வேண்டுமானால் அது பற்றி உள்துறை அமைச்சர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கலாம். எனினும், இன்னும் அவ்வாறான கோரிக்கை முன்வைக்கப்படவில்லை.
' நவீன ஆஸ்திரேலியாவை அவர் வெறுக்கின்றார் என்பது தெளிவாகின்றது." என்று உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.