போர்க்கப்பல்கள் கொள்வனவு தொடர்பில் ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பானுக்கிடையிலான ஒப்பந்தம் அடுத்த வருடம் முற்பகுதியில் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கிடையிலான வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் பெனி வோங், பாதுகாப்பு அமைச்சர் மார்லஸ் ஆகியோர் டோக்கியோ சென்றுள்ளனர்.
இன்று அங்கு நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் பின்னரே ஆஸி. பாதுகாப்பு அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார்.
புதிய ஒப்பந்தத்தின் பிரகாரம் முதலாவது போர்க்கப்பலை 2029 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
' ஆஸ்திரேலியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பின் அடிப்படையில் இது புதிய தளத்தை உருவாக்கும். ஜப்பான் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ளது. எனவே, இங்குள்ள பாதுகாப்புத் தொழில்துறை தளத்தில் நாம் இன்னும் பரந்த அளவில் ஒத்துழைக்க மகத்தான வாய்ப்புகள் இருப்பதைக் காண்கிறோம்." - எனவும் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஜப்பான் பிரதமருடனும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் பேச்சு நடத்தியுள்ளனர்.