அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர ஆதரவாளரான சார்லி கிர்க் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த சம்பவத்தை ஆஸ்திரேலியா வன்மையாகக் கண்டித்துள்ளது.
" அமெரிக்க வலதுசாரி விமர்சகர் சார்லி கிர்க்கின் படுகொலை கொடூரமானது." என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.
' அரசியலில் வன்முறைக்கு இடமிருக்க கூடாது. இதுபோன்ற ஒரு நிகழ்வால் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது என்று நான் நினைக்கிறேன்.
ஆஸ்திரேலியாவில் நாம் நடந்து கொள்ளும் விதம் குறித்து உண்மையிலேயே பெருமைப்படலாம். தீவிர இடதுசாரிகளாக இருந்தாலும் சரி, தீவிர வலதுசாரிகளாக இருந்தாலும் சரி, அவர்களுக்குரிய உரிமைகள் மதிக்கப்படுகின்றன." - எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வலதுசாரி ஆதரவாளரான சார்லி கிர்க், உடா பல்கலைகழகத்தில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் குண்டு துளைத்தது.
இதனையடுத்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்தும் சிகிச்சை பலனின்றி சார்லி கிர்க் உயிரிழந்தார்.
சார்லி கிர்க்கின் கொலைக்கு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் அமெரிக்க அரசாங்கம் கண்டுபிடித்து தண்டிக்கும் என்று டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் காட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அரசியல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
இந்தப் படுகொலை சம்பவத்தை அடுத்து உடா பல்கலைக்கழகத்துக்கு வரும் 15-ம் திகதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
31 வயதான சார்லி கிர்க் அமெரிக்காவின் சிகாகோ நகரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பழமைவாத சிந்தனையாளர். அமெரிக்காவின் முக்கிய வலதுசாரி அரசியல் பிரமுகர்களில் ஒருவராக அறியப்படுகிறார். எழுத்தாளர், பேச்சாளர், வர்ணனையாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். சில காலம் தேசிய கொள்கைக்கான கவுன்சிலிங் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.
சார்லிக்கும் ட்ரம்ப்புக்கும் இடையே நீண்ட நட்பு உள்ளது. 2016 முதல் இந்த நட்பு மிகவும் வலுவானது. ஒரு முறை சார்லியை ட்ரம்ப் ‘ஒளியின் போராளி’ என்று புகழ்ந்தது நினைவுகூரத்தக்கது.
2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ‘மீண்டும் அமெரிக்காவை வலிமையானதாக மாற்றுவோம் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்க ட்ரம்ப்புக்கு தூண்டுகோலாக இருந்தார்.