படத்திலுள்ள பெண் ஆஸ்திரேலிய எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே. அந்நாட்டில் கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த பீட்டர் டட்டன் தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தார். இதனையடுத்தே எதிர்க்கட்சி தலைவராக லே தெரிவுசெய்யப்பட்டார். அவர் லிபரல் கட்சி தலைவர் என்பதுடன், எதிரணி கூட்டணியையும் வழி நடத்திவருகின்றார்.
அடுத்த படத்திலுள்ளவர் இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச. இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்பதுடன், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவராகவும் செயற்படுகின்றார்.
சரி எதற்காக தற்போது இந்த பதிவு என சிந்திக்கின்றீர்களா? வாருங்கள் விடயத்துக்குள் செல்வோம்.
இலங்கை நாடாளுமன்றத்தில் பல நாடுகளுக்குரிய நட்புறவு சங்கங்கள் உள்ளன. இலங்கை, இந்திய நாடாளுமன்ற நட்புறவு சங்கம், இலங்கை, துருக்கி நாடாளுமன்ற நட்புறவு சங்கம் என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இந்நிலையில்தான் இலங்கை, இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை கட்டியெழுப்புவதற்குரிய அழைப்பை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்ஹ வெளியிட்டிருந்தார். இதற்குரிய கூட்டமொன்றையும் இன்று (12) வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சரி, இதில் என்ன தவறு? என்ற வினா எழக்கூடும்.
இலங்கையானது அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையை பின்பற்றும் நாடு. பாலஸ்தீன விடுதலைக்காக - சுதந்திரத்துக்காக ஆரம்பம் காலம் முதலே குரல் கொடுத்துவருகின்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி, மொட்டு கட்சி ஆட்சி, தேசிய மக்கள் சக்தி ஆட்சி என்பவற்றில்கூட இந்நிலைப்பாடு மாறவில்லை. பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் முடிவிலேயே இலங்கை உள்ளது.
இலங்கையில் இஸ்ரேல் தூதரகம்கூட இதுவரைகாலமும் அமைக்கப்படவில்லை.
இஸ்ரேலானது பாலஸ்தீனம், காசா பகுதியில் உக்கிர தாக்குதல் நடத்திவருகின்றது. பச்சிளம் குழந்தைகள் முதல் கருசுமந்த தாய்மார்வரை பலர் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர்.
பாலஸ்தீனத்தில் அரங்கேறும் கொடூரங்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வன்மையாகக் கண்டித்துள்ளார். பாலஸ்தீன ஆதரவு சால்வையை அணிந்து நாடாளுமன்றத்தில் உரையும் நிகழ்த்தி இருந்தார்.
ஐரோப்பிய நாடுகள்கூட பாலஸ்தீனத்தை அங்கீகரித்து, இஸ்ரேலின் அணுகுமுறையை விமர்சித்துவரும் நிலையில், சுஜீவ சேனசிங்ஹவின் இந்த முயற்சியின் பின்னணி என்ன?
நிச்சயமாக இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் குறிப்பாக மனிதநேயத்தை நேசிப்பவர்களின் மனதை நோகடிக்கும் செயலாகவே இது அமைந்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலும் இதற்கு நிகரானதொரு சம்பவம் நடந்தது. ஆனால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடம் எதிர்க்கட்சி தலைவர் பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இந்திய சமூகத்தை இலக்கு வைத்து விமர்சனக் கணை தொடுத்த லிபரல் கட்சி செனட்டரை பதவி நீக்கம் செய்தார்.
ஆஸ்திரேலியாவில் குடியேறும் இந்தியர்கள் எண்ணிக்கை அண்மைகாலமாக அதிகரித்து வருகிறது. அங்கு குடியேறிய வெளிநாட்டவர்களில் இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-ம் இடத்தில் உள்ளனர்.
கடந்த 2023-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.4 லட்சம் இந்தியர்கள் அங்கு வசிக்கின்றனர். இதுதவிர, ஆயிரக்கணக்கானோர் ஆஸ்திரேலியாவிலேயே பிறந்து குடியுரிமை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டினர் அதிக அளவில் குடியேறுவதற்கு எதிராக, நாடு முழுவதும் ‘மார்ச் பார் ஆஸ்திரேலியா' என்ற பெயரில் பேரணி மற்றும் போராட்டம் நடைபெற்றது.
இவ்வாறானதொரு பின்புலத்தில் லிபரல் கட்சி கட்சியின் செனட்டர் ஜசிந்தா நம்பிஜின்பா பிரைஸ்,
“பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையிலான லேபர் கட்சி, வாக்கு வங்கிக்காக இந்தியர்களை அதிக அளவில் குடியேற அனுமதிக்கிறது’’ என குற்றஞ்சாட்டி இருந்தார்.
இவரது இந்தக் கருத்து ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் மத்தியில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ஜசிந்தா மன்னிப்பு கோர வேண்டும் என அவருடைய கட்சியினர் உட்பட பலர் வலியுறுத்தி உள்ளனர். ஆஸ்திரேலிய பிரதமர்கூட இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
எனினும், அவர் மன்னிப்பு கோர மறுத்தார். இதனையடுத்து எதிரணி நிழல் அமைச்சரவையில் இருந்து அவரை எதிர்க்கட்சி தலைவர் நீக்கினார். நாடாளுமன்றத்தில் முன்வரிசையில் அவருக்குரிய அந்தஸ்தும் நீக்கப்படும்.
அத்துடன், நின்றுவிடவில்லை இந்திய சமூகத்திடம் எதிர்க்கட்சி தலைவர் லே பகிரங்கமாக மன்னிப்பு கோரினார். இது எதிர்க்கட்சி தலைவரின் தலைமைத்துவ குணவியல்பை வெளிப்படுத்துகின்றது.
இலங்கை, இஸ்ரேல் நட்புறவு சங்கத்தை அமைக்க முற்பட்டமை தொடர்பில் சுஜீவ சேனசிங்ஹ தனது முகநூல் பக்கம் ஊடாக பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
' நான் தவறுதலாக கூட்டிய, இலங்கை - இஸ்ரேல் நாடாளுமன்ற நட்புறவுச் சங்கத்தை இரத்துச் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளேன்!
நடந்த தவறுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!" - என்று அவரது முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் மன்னிப்பு கோரியது வரவேற்கத்தக்கது.
ஆனால் யூத வழிபாட்டுதலம் அமைப்பதற்குகூட போர்க்கொடி தூக்கி கருத்து வெளியிடும் - சஜித் தரப்புடன் கூட்டணி வைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இது விடயம் தொடர்பில் என்ன செய்யபோகின்றனர்? மன்னிப்பு மட்டும் போதுமா? சுஜீவவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதா? இதற்குரிய அழுத்தத்தை சஜித்துக்கு கொடுப்பார்களா?
இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்கும் விடயத்தில்கூட கூடுதல் கரிசணையுடன் சபையில் விடயங்களை சுட்டிக்காட்டும் முஜிபூர் ரஹ்மான், ஐக்கிய மக்கள் சக்தியில் முக்கிய பதவியில் இருப்பவர். எதிரணியின் ஒரு தூண் என்றுகூட சொல்லலாம். இது விடயத்தில் அவரின் நிலைப்பாடு என்ன?
பாலஸ்தீன மக்களுக்காக தளராத துணிவோடு களமாடும் சஜித், தனது கட்சி உறுப்பினரின் செயலுக்காக மன்னிப்பு கோருவாரா? தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை பறிக்காவிட்டாலும் குறைந்தபட்சம் ஒழுக்காற்று நடவடிக்கையேனும் எடுக்கப்படுமா?
ஆர்.சனத்