இரு பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொலை செய்த டேஸி பிரிமேனை கண்டுபிடித்து - கைது செய்ய உதவும் நபருக்கு ஒரு மில்லியன் டொலர்கள் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை விக்டோரிய பொலிஸார் வெளியிட்டுள்ளனர். விக்டோரிய மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய பரிசுத்தொகையாக இது கருதப்படுகின்றது.
பிரிமேனை கைது செய்வதற்கு அந்த தகவல் நேரடியாக உதவ வேண்டும் என்பது பொலிஸ் தரப்பின் நிபந்தனையாக உள்ளது.
' வெகுமதி அளிப்பு குறித்த அறிவிப்பு, சந்தேக நபரை கைது செய்வதற்கு மக்கள் மத்தியில் உற்சாகத்தை தூண்டும்." என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிரிமேனை கைது செய்வதற்குரிய தேடுதல் வேட்டை தொடரும் நிலையில் அவர் இன்னும் சிக்கவில்லை.
விக்டோரியாவில் போரேபுன்கா நகரிலுள்ள வீடொன்றுக்கு வழக்கு தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட வாரண்டை நிறைவேற்றுவதற்கு பொலிஸார் சென்றிருந்தவேளை, இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார்.
பொலிஸாரை நோக்கி இவர் 20 தடவைகளுக்கு மேல் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
இச்சம்பவத்தையடுத்து 56 வயதான துப்பாக்கிதாரி தலைமறைவானார். தன்னிடம் இருந்த துப்பாக்கிகள் மற்றும் உயிரிழந்த பொலிஸாரிடம் இருந்த துப்பாக்கிகள் சகிதமே அவர் காட்டுக்குள் தப்பியோடி இருந்தார் .
பிரிமேன் ‘இறையாண்மையுடைய குடிமக்கள்’ எனும் கொள்கையை கடைபிடிக்கும் குழுவை சேர்ந்தவராவார். இவர் தீவிரவாத போக்குடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
பரிசு தொகை அறிவிப்பையடுத்து, பிரிமேனை தேடுவதில் மக்களும் ஆர்வம் காட்டிவருகின்றனர். எனினும், சிலர் பணம் பெறும் ஆர்வத்தில் போலித்தகவலை வெளியிடக்கூடும் என சில நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதேபோல இது பிரிமேன் தப்பிச்செல்வதற்கு வழிவகுக்கக்கூடும் எனவும் குறிப்பிடுகின்றனர்.