- ஐங்கரன் விக்கினேஸ்வரா
இலங்கை, வங்காளம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம் ஆகும்.
இந்த மூன்று ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய பங்கை வகித்தவர்கள் இளைஞர்களே. இந்த அரசுகள் இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால் மேலும் போராட்டங்கள் தொடரக்கூடும்.
இலங்கை, வங்காளம் நாடுகளைத் தொடர்ந்து தற்போது நேபாளத்திலும் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் காரணமாக ஆளும் கட்சி ஆட்சியை விட்டு துரத்தப்பட்டுள்ளது.
சமூக வலைத்தள தடை:
நேபாளத்தில் இளம் போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை அடித்து நொறுக்கி உள்ளனர். பாராளமன்றத்தை தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதையடுத்து நேபாள அதிபர், பிரதமர் ஆகியோர் ராஜினாமா செய்தனர். நேபாள பிரதமர் தப்பியோடி உள்ளார்.
நேபாளத்தில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் 2008-ம் ஆண்டு மே மாதம் இந்து மன்னராட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்து வந்த மன்னராட்சியை அகற்ற வலியுறுத்தி பல ஆண்டுகளாக நடந்த போராட்டத்துக்கு அப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் அப்போராட்டத்தில் 16,000 மக்கள் உயிரிழந்தனர்.
நேபாளம் தற்போது வரலாறு காணாத போராட்டங்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்களை வழிநடத்துபவர்கள் வேறு யாருமல்ல, சமூக ஊடகங்களில் கொடிகட்டிப் பறக்கும் Gen Z என்ற (ஜெனரேஷன் Z) இளைஞர்கள் தான்.
தெற்காசியப் புவிசார் அரசியல்:
பொதுவாக 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலை முறையினர் என்று நேபாளத்தில் வரையறுக்கப்படும் இளைஞர்கள், வேலையின்மை, வறுமை, மற்றும் அரசின் அப்பட்டமான ஊழல்கள் என பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் நடந்த போராட்டத்தின் காட்சிகள், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை நினைவூட்டின. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலும் இளைஞர்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர்.
நேபாளத்தில் மற்றொரு நெருக்கடி என்னவென்றால், முடியாட்சி முடிந்த பிறகு எந்த ஒரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இல்லை. இதன் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகின்றன.
Gen Z இளைஞர் புரட்சி :
நேபாள அரசு, முகநூல்,இன்ஸராகிராம், யூடீயூப் (Facebook, Instagram, YouTube) உள்ளிட்ட 26 முக்கிய சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்ததால் தான் இந்த ஆவேசப் போராட்டம் வெடித்தது. இந்த தளங்கள் நேபாள அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்படாததே தடைக்கான காரணம் என அரசு கூறினாலும், இளைஞர்கள் இதை நம்பவில்லை.
ஆயினும் உண்மையான காரணம் பல ஆண்டுகளாக நேபாள இளைஞர்கள் மனதில் குமுறிக் கொண்டிருந்த கோபம்தான் இந்த போராட்டம். வேலையின்மை, வறுமை, மற்றும் அரசின் அப்பட்டமான ஊழல்கள் என பல்வேறு பிரச்சனைகளால் அவர்கள் விரக்தியின் உச்சத்தில் இருந்தனர். இதற்கிடையில், #NepoKid (#ஊழல்_பிள்ளைகள்) என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பரவி, அரசியல்வாதிகளின் ஆடம்பர வாழ்க்கை முறையையும், சாதாரண மக்களின் வறுமையையும் ஒப்பிட்டு, அவர்களின் கோபத்தை மேலும் தூண்டியது.
நேபாள அரசு, கடந்த வாரம் செப்டம்பர் 4-ஆம் திகதி முதல் 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. தகவல் தொடர்பு அமைச்சகத்தில் பதிவு செய்ய தவறியதே இதற்கு முக்கிய காரணம் என அரசு கூறியது. ஆனால், இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் முயற்சி என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தத் திடீர் சமூக ஊடகத் தடை, ஏற்கெனவே ஊழல் மற்றும் பொருளாதார பிரச்சனைகளால் கோபத்தில் இருந்த நேபாள இளைஞர்களை, வீதியில் இறங்கி போராட தூண்டிய ஒரு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.
பங்களாதேஷ் மாணவர் எழுச்சி:
தென்னாசிய பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவுக்கு மேலாக உயர்ந்த நிலையில் இருந்த வங்க தேசம் கடந்த ஆண்டு பொருளாதர வீழ்ச்சியை அடைந்தது. வளர்ந்து வரும் அபிவிருத்தியில் 455 பில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட பங்களாதேஷ், பிரச்சனையில் இருந்து வெளியேறுவது பெரும் சிக்கலாக இருந்தது.
மாணவர்கள் பங்களாதேஷில் 2024 ஜூலை மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் பல வாரங்களாக தொடர்ந்த புரட்சி சொந்த நாட்டின் அரசையே ஆட்டங்காண வைத்தனர். அதேவேளை அந்நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது என்பதும் உண்மைதான்.
சர்ச்சைக்குரிய இடஓதுக்கீடு:
இந்த போராட்டங்களுக்கு காரணம், சர்ச்சையிலிருந்த வேலைவாய்ப்பு இடஓதுக்கீட்டால், பங்களாதேஷ் முழுவதும் மாணவர்கள் எழுச்சியால் அரசியல் வன்முறை வெடித்தது. 2024 ஜூலை 31 வரையில் இந்த வன்முறை மூலம் பங்களாதேஷ் பொருளாதாரத்திற்கு 10 பில்லியன் டொலர் மதிப்பிலான இழப்பு ஏற்பட்டது.
அன்றைய பிரதமர் ஷேக் ஹசீனா 2024 ஜனவரி மாதம் நடந்த பொதுத் தேர்தலில் 41.8% வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிகாரத்திற்கு வந்த பின், பல வருடங்களாகச் சர்ச்சையிலிருந்த வேலைவாய்ப்பு இடஓதுக்கீட்டை மீண்டும் அமுலாக்கம் செய்யும் முயற்சியில் இறங்கினார்.
இதன் விளைவே ஆட்சியை இழந்து, பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறினார். மாணவர்களின் தொடர் போராட்டங்களால் பங்களாதேஷ் நாடு எப்போதும் இல்லாத வகையில் அமைதியற்ற நாடாக மாறியது. தினமும் பலர் கொல்லப்பட்டனர்.
இறுதியில் மாணவ போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லமான ஹணபபானுக்குள் (Ganabhaban) நுழைந்து மொத்த வீட்டையும் சூறையாடி அழித்தனர். ஆயினும் இதற்கு முன்பே பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அவருடைய சகோதரி ஷேக் ரெஹானாவுடன் வங்கதேசத்தை விட்டு ஹெலிகாப்டர் வாயிலாக இந்தியாவுக்குத் தப்பி வெளியேறி உள்ளார்.
இவை அனைத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தது அந்நாட்டில் அமலிலிருந்த சர்ச்சைக்குரிய வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டு முறை தான். இதை எதிர்த்து மாணவர் போராட்டங்களில் தொடங்கியது நாடு தழுவிய நெருக்கடியாக அதிகரித்தது.
இலங்கையில் அரகலய போராட்டம்:
2022 இலங்கையின் பொருளாதாரத்தை தவறாக நிர்வகித்த அரசால், அடுத்தடுத்த பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான பணவீக்கம், நாள்தோறும் மின்தடை, மற்றும் எரிபொருள், உள்நாட்டு எரிவாயு, பிற அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறைக்கு வழிவகுத்தது.
அப்போது ஆட்சியில் இருந்த ராசபக்ச குடும்பத்தின் தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்பதே போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாகும்.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு, சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, உணவுப் பொருள் தட்டுப்பாடு போன்ற பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்ட பல்வேறு தரப்பினரும் 2022 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 31 ஆம் திகதியன்று ஜனாதிபதியின் இல்லத்தை முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கான சமூக ஊடகத் தலைவர்களும் இம்முற்றுகையில் பங்கேற்று ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி போராடினர்.
பல ஆண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வேண்டி, இளைஞர்கள் 2022 மார்ச் மாதத்தில், இலங்கையில் அரசுத் தலைவர் கோட்டபய்ய ராஜபக்சேவின் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களை தொடங்கினர். பெரும்பாலான எதிர்ப்பாளர்கள் தங்களை அரசியலற்றவர்கள் என்று கருதுகின்றனர், மேலும் சிலர் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளின் மீது தமது அதிருப்தியையும் வெளிப்படுத்தினர். போராட்டங்களின் போது, எதிர்ப்பாளர்கள் "கோட்டா வீட்டுக்குப் போ", "ராசபக்ச வீட்டுக்குப் போ" போன்ற எதிர்ப்புகளை எழுப்பினர்.
அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தல், பொதுமக்களைக் கைது செய்ய இராணுவத்தை அனுமதித்தல், ஊரடங்குச் சட்டங்களை விதித்தல், சமூக ஊடகங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல், எதிர்ப்பாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக வலைத்தள ஆர்வலர்களைத் தாக்குதல் போன்ற எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் எதிர்வினையாற்றியது.
எதிர்ப்புகளை ஒடுக்க முயற்சித்ததன் மூலம் அரசாங்கம் சட்டம் மற்றும் அரசியலமைப்பையும் மீறியது. புலம்பெயர்ந்த இலங்கையரும் இலங்கையில் அடிப்படை மனித உரிமைகள் நசுக்கப்படுவதற்கு எதிராகத் தத்தமது நாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.
அமெரிக்கா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் டுவிட்டரில் #GoHomeRajapaksas, #GoHomeGota உள்ளிட்ட குறியட்டைகள் பரவலாகப் பிரபலமானதை அடுத்து, தடைகள் பலவும் நீக்கப்பட்டன.
2022 ஏப்ரல் 3 அன்று, பிரதமர் மகிந்த ராசபக்சவைத் தவிர, கோட்டாபய அமைச்சரவையில் இருந்த 26 உறுப்பினர்களும், பதவி விலகினர். இதையடுத்து 2022 மே 9 இல், பிரதமர் மகிந்த ராசபக்ச தனது பதவியில் இருந்து விலகினார். அமைதியான போராட்டங்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டு பதவி விலகியதாக மகிந்த கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
மேலும் 2022 ஜூன் 9 அன்று, பசில் ராஜபக்ச தனது தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தார். 2022 ஜூலை 9 அன்று, போராட்டக்காரர்கள் கொழும்பு நகரில் உள்ள அரசுத்தலைவர் மாளிகையை முற்றுகையிட்டு அதனைக் கைப்பற்றினர். இதனால் கோட்டாபய ராசபக்ச தலைமறைவானார். இதையடுத்து இடைக்கால பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தாம் பதவி விலக விரும்புவதாக அறிவித்தார்.
2022 ஜூலை 13இல் அரசுத்தலைவரும் அவரது மனைவியும் மாலைதீவிற்கு வான்படை வானூர்தியில் சென்று அங்கிருந்து தனிப்பட்ட பயணமாக சிங்கப்பூர் சென்றனர். சிறிலங்கா வரலாற்றில் முதன் முறையாக நாட்டின் இளைஞர் போராட்டத்தால் ஓர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
தெற்காசியவில் இளைஞர் வகிபாகம்:
தெற்காசிய கண்டமானது வேலையற்ற, பொருளாதார நெருக்கடி மிகுந்த இளைஞர்கள் அதிகம் வாழும் நாடுகளாகும். குறிப்பாக இந்தியா, வங்காளம், இலங்கை, பாகிஸ்தான் போன்ற அரசுகளால் இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மூன்று நாடுகளின் போராட்டங்களிலும் இதுதான் போராட்டத்தின் பொதுவான ஒற்றுமை.
இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம். இந்த மூன்று போராட்டங்களிலும் 'இளைஞர்கள்' தான் மிகப் பெரிய மூலோபய சக்திமிக்க காரணிகளாவர்.
இந்த அரசுகளின் ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய காரணிகளாக இளைஞர்கள் மீதே விழுகிறது. இந்த இளைஞர் பிரிவினர்தான் இத்தகைய அரசுகளின் மீது கோபமாக உள்ளனர். அரசு இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால், இதுபோன்ற போராட்டங்கள் இன்னும் பல நாடுகளில் நடைபெறும் சாத்தியங்கள் உள்ளன.