பசுபிக் நாடுகளில் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்கு சீனா தீவிரம் காட்டிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியாவும் கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றது.
பசுபிக் நாடுகளில் மிக முக்கிய சக்தியாக ஆஸ்திரேலியா விளங்கும் நிலையில், பிராந்திய நாடுகளுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுவருகின்றன.
அந்தவகையில் பப்புவா நியூ கினியா நாட்டுடனும் வெகுவிரைவில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இராணுவ தாக்குதல்களின்போது இரு நாடுகளும் தமக்குரிய ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவது இதன் நோக்கங்களுள் ஒன்றாகும்.
ஆஸ்திரேலியாவிடமிருந்து பப்புவா நியூ கினியா சுதந்திரமடைந்து இன்றோடு 50 வருடங்களாகின்றது. இதனை முன்னிட்டு பசுபிக் தலைவர்கள் பப்புவா நியூ கினியாவில் ஒன்றுகூடியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவுடன் கைச்சாத்திடப்படவுள்ள புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை பப்புவா நியூ கினியா பிரதமர் அந்நாட்டு அமைச்சரவையில் நேற்று முன்வைத்தார். எனினும், சுதந்திர தின கொண்டாட்டம் காரணமாக அமைச்சரவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது சற்று தாமதமாகலாம்.
" புதிய ஒப்பந்தம் தமது நாட்டு இறையாண்மையை பாதிக்காது. நாம் இப்போது சுதந்திர நாடு. தேவையேற்பட்டால் எதிர்காலத்தில் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம்." - என்று பப்புவா நியூ கினியா பிரதமர் தெரிவித்தார்.
அமைச்சரவையில் அனுமதி கிடைத்த பின்னர், நாடாளுமன்றத்தில் ஒப்பந்தத்தை முன்வைத்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பப்புவா நியூகினியா மக்கள் ஆஸ்திரேலியா பாதுகாப்பு படைகளில் சேரவும், ஆஸ்திரேலிய படைகளுடன் இணைந்து செயற்படவும் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் ஏற்பாடு உள்ளது. இராணுவ தாக்குதல்களின்போது பதிலடியை ஒருங்கிணைப்பதற்குரிய வழிமுறை, சைபர் பாதுகாப்பு, கூட்டு போர் பயிற்சி உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.