மூன்று சேவல்கள் உட்பட தமது கோழி பண்ணையில் உள்ள கோழிகளை அகற்றக்கோரும் உள்ளாட்சிசபையின் முடிவுக்கு எதிராக செயற்பட்ட தெற்கு ஆஸ்திரேலிய குடியிருப்பாளர் சட்ட போராட்டத்தை எதிர்கொண்டுள்ளார்.
இவரது பண்ணையில் உள்ள சேவல்கள் சத்தமாக கூவுவதாகவும், கோழிகளின் கொக்கரிப்பால் இடைஞ்சலாக உள்ளதாகவும் அடிலெட்டு சமவெளி உள்ளாட்சி மன்றத்துக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அப்பிரதேச மக்களால் இது தொடர்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் கவனம் செலுத்திய உள்ளாட்சிமன்ற நிர்வாகம், கோழிகளை அகற்றுமாறு குறித்த நபருக்கு அறிவுறுத்தி இருந்தது. இவ்வாறு மூன்று தடவைகள் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டும், அவர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனையடுத்து இவ்விவகாரம் அடிலெய்டு சுற்றுசூழல் நீதிமன்றத்துக்கு சென்றது. தனக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படுவதை நிறுத்துமாறு அந்நபர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். அதற்குரிய காரணங்களையும் பட்டியலிட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட நபர் தற்போது ஊனமுற்றுள்ளார். அவர் தனக்குள்ள உளவியல் பிரச்சினைகளையும் எடுத்துரைத்துள்ளார். உள்ளாட்சி மன்றத்தின் முடிவு சர்வதேச மனித உரிமை மரபுகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டி வழக்கு தொடரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், குடியிருப்பாளர்களின் முறைப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளாட்சிமன்றம் சார்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.