ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நாடுகளுக்கிடையிலான உத்தேச புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூன்றாம் தரப்புடனான ஒத்துழைப்பை தடுக்கும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் பப்புவா நியூ கினியா கைச்சாத்திடக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவிலுள்ள சீனத் தூதரகமே சமூகவலைத்தள பதிவு ஊடாக இதனை வலியுறுத்தியுள்ளது.
இரு நாடுகளில் ஏதேனும் நாடொன்றின்மீது போர் தொடுக்கப்பட்டால் இணைந்து கூட்டாக பதிலளித்தல், சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வகையில் ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவுக்கிடையில் பாதுகாப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவிடமிருந்து பப்புவா நியூ கினியா சுமந்திரம் அடைந்து கடந்த 16 ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியானது. இதனை முன்னிட்டு மேற்படி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும், பப்புவா நியூ கினியா அமைச்சரவையின் ஒப்பந்தம் கிடைக்காததால் அது நடக்கவில்லை. எனினும், ஒப்பந்தத்துக்குரிய இணக்கப்பாட்டு ஆவணத்தில் கைச்சாத்திடப்பட்டது.
பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை கட்டுப்படுத்துவதற்கு ஆஸ்திரேலியா கடும் பிரயத்தனங்களில் ஈடுபட்டுவருகின்றது. இதன்ஓர் அங்கமாகவே மேற்படி ஒப்பந்தம் கருதப்படுகின்றது.
இந்நிலையிலேயே இந்த இரு தரப்பு ஒப்பந்தம் மூன்றாம் நாடுகளுடனான ஒத்துழைப்பை தடுக்கும் வகையில் அமையக்கூடாது என பீஜிங் குறிப்பிட்டுள்ளார்.
" பிற நாடுகளுடன் இருதரப்பு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு பப்புவா நியூ கினியாவுக்கு உள்ள உரிமையை சீனா மதிக்கின்றது. ஆனால் அத்தகைய ஒப்பந்தம் பிரத்தியேகமானதாக இருக்கக்கூடாது.
எந்த காரணத்திற்காகவும் ஒரு இறையாண்மை கொண்ட நாடு மூன்றாம் தரப்பினருடன் ஒத்துழைப்பதை அது கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ கூடாது.
எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் குறிவைப்பதையோ அல்லது அதன் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் நலன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதையோ அது தவிர்க்க வேண்டும்" எனவும் சீனத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.