ஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரி இருந்த மேலும் ஒரு ஈழத் தமிழரை லேபர் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளமை தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
வில்லாவுட் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த 37 வயது ஈழத் தமிழர் ஒருவரே நேற்று இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இற்றைக்கு 13 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆஸ்திரேலியா வந்துள்ளார். குடியுரிமைகோரி விண்ணப்பித்திருந்தாலும் அது கிடைக்கப்பெறவில்லை.
வெள்ளிக்கிழமை அவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டு குறுகிய காலப்பகுதிக்குள் அவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். இதனால் சட்ட நிவாரணத்தை நாடுவதற்கு அவருக்கு உரிய வாய்ப்பு இருக்கவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏதிலிகள் பிரச்சினைக்கு லேபர் அரசு தீர்வை வழங்கும் என சில ஏதிலிகள் செயற்பாட்டு அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டு வந்தாலும், தற்போது அதற்கு மாறாகவே நடக்கின்றது.
விசா வழங்குவது பற்றி பரீசிலிப்பதைவிடுத்து நாடு கடத்தல் ஆயுதம் கையிலெடுக்கப்பட்டுள்ளது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.