லெபனானில், அரபுசலீம் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய வான்வழி தாக்குதலில் 4 பேர் பலியாகியுள்ளனர்.
இஸ்ரேல் - ஹமாஸ் போர் கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஆதரவாக லெபனானில் செயல்பட்டு வந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
இதையடுத்து, லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் கடந்த ஆண்டு அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உள்பட பலர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனாலும், ஹிஸ்புல்லா மீண்டும் ஆயுதங்களை தயாரித்து தாக்குதல் நடத்துவதை தடுக்க அந்த அமைப்பினர், ஆயுத கிடங்குகளை குறிவைத்து இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள அரபுசலீம் பகுதியில் இஸ்ரேல் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லா ஆயுத கிடங்கை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.