இலங்கை, பங்களாதேஷ், நேபாளத்தில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை தினத்தை ஒட்டி டெல்லியில் நேற்று நடைபெற்ற விழாவில் உரையாற்றுகையிலேயே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இவ்வாறு கூறியுள்ளார்.
“ ஓர் அரசு வலுவாக இருந்தால் மட்டுமே நாடு வளர்ச்சி அடையும். அண்மை காலத்தில் இலங்கை, பங்களாதேஷ், நேபாளத்தில் ஆட்சிகள் மாறின. அந்த நாடுகளில் பலவீனமான அரசால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
பலவீனம், சுயநலம், குழப்பமான அரசால் நாட்டை திறம்பட வழிநடத்த முடியாது. ஒரு நாட்டின் அரசியல் அமைப்புகள் வலுவாக இருக்க வேண்டும். நாட்டு மக்கள் அரசியல் அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும்.
சர்வாதிகார ஆட்சியில் சட்டங்கள் வளைக்கப்படும், நீதி மறுக்கப்படும். மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கும். ராணுவம், அரசு நிர்வாகத்தில் ஊழல்கள் அதிகரிக்கும். உணவு, குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். பணவீக்கம், வரிச்சுமை அதிகரிக்கும்.
இத்தகைய ஆட்சியை எதிர்த்து மக்கள் போராட தொடங்கி விடுவார்கள். ஒரு நாட்டின் குடிமக்களுக்கு பல்வேறு கனவுகள் இருக்கும். அந்த கனவுகளை நிறைவேற்றும் வகையில் அரசு செயல்பட வேண்டும். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது ஒவ்வொரு அரசின் கடமை ஆகும்.” எனவும் இந்திய பாதுகாப்பு ஆலொசகர் குறிப்பிட்டார்.