ஈழத் தமிழரின் சுயநிர்ணய போராட்டம் உலக அரசியல் சூழ்நிலையால் நிர்ணயிக்கப்படுகிறது !
— மெல்பேர்ண் நூல் வெளியீட்டில் ஜூட் பிரகாஷ் உரை:
மெல்பேர்ணில் 25/10/25இல் இடம்பெற்ற, ஐங்கரன் விக்கினேஸ்வராவின் ஆறு நூல்கள் வெளியீட்டு விழாவில் ஜூட் பிரகாஷ் ஆற்றிய உரை வருமாறு,
ஐங்கரன் விக்கினேஸ்வரா , நாங்கள் இருவரும் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் பழைய மாணவர்கள். யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரி… காலங்கள் கடந்தும் எங்களைப் பிணைத்த, பிணைத்துக் கொண்டிருக்கும் அன்புப் பிணைப்பு, நாங்கள் ஆழமாக நேசிக்கும் எங்களின் 202 ஆண்டுகளை கடந்து பயணிக்கும் பெருமைமிகு அடையாளம்.
ஐங்கரன் பரி யோவானின் புகழ்பூத்த 1989 batch காரன். அவரது 89 batch அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் மிகவும் புகழ்பெற்றது. 1992 batch காரர்களான நாங்கள் வியந்து பார்த்து, இவர்களைப் போல வரவேண்டும், வாழ வேண்டும், அட்டகாசம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்ட அதிதிறமைசாலிகளை தன்னகத்தே கொண்ட batch தான் அண்ணரின் SJC89 batch.
அந்தப் batch இல் கல்வி, விளையாட்டு, இலக்கியம், இசை, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய சிங்கன்கள் இருந்தனர். அண்ணரின் batch காரன்கள் மட்டுமல்ல, அவங்கள் சுழற்றிய பெட்டைகளின் பெயர்களும் பரி யோவானின் வரலாற்றில் இடம்பிடிக்குமளவிற்கு இவங்களின் காதல் சுழற்றல் கதைகள் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானவை.
1989 batch இன் மாணவரான சுபனேசன், 1989ஆம் ஆண்டு உயர் தர bio பிரிவில் இலங்கைத் தீவின் முதலாவதாக வந்தவர். 1989 cricket team பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சஞ்சீவன் 1988 மற்றும் 89 ஆண்டுகளில் தலைமை தாங்கிய அணியை வெற்றி கொள்ள யாழ்ப்பாணத்தில் எந்த பாடசாலையாலும் ஏலாமல் இருந்தது.
பரி யோவானில் ஐங்கரன் அண்ணரின் வகுப்பில் படித்தவர்களில் எங்கள் தேசத்திற்கான விடுதலைப் போராட்டத்தில் இணைந்து சரித்திரம் படைத்தவர்களும் இருக்கிறார்கள். இயக்கத்தின் முதலாவது பறப்பில் பறந்த வானோடி ஒருவரும், கடலிலே காவியங்கள் எழுதிய கடலோடிகளாகவும், சரித்திரம் படைத்த அவர்களின் கதைகளை காலம் வரும் போது ஜங்கரன் அண்ணா எழுதுவார் என்று நம்புகிறேன்.
ஆனால் அந்த வெற்றிகளுக்குப் பின்னால், வேதனைகளும் இருந்தது. ஐங்கரனின் அண்ணரின் இரண்டு வகுப்புத் தோழர்கள், அகிலன் திருச்செல்வம் மற்றும் “அறிவாளி” தேவகுமார், ஈபிகாரன்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பள்ளிக்காலங்களில் ஜங்கரன் அண்ணா வெளியிட்ட இரு நூல்கள் பற்றியும் தொட்டுச் செல்லலாம். முதலாவது 1981 ஜூன் முதலாம் திகதி எரிக்கப்பட்ட யாழ்ப்பாண நூலகத்ததின் நினைவுகளை சுமந்த “அணையாத அறிவாலயம்” , இரண்டாவது அகிலன் படுகொலை செய்யபட்ட பின்னர், அகிலனின் எழுத்துக்களை தாங்கி வந்த “மரணம் வாழ்வின் முடிவல்ல” என்ற கவிதைத் தொகுப்பு.
ஐங்கரனின் எழுத்து, அந்தக் காலத்து நினைவுகளின் ஒரு பிரதிபலிப்பு. அவரது அரசியல் சிந்தனைகள், தமிழர் தாயகத்தில் நாங்கள் அனுபவித்த அனுபவங்களின் ஆழத்திலிருந்து உருவானவை. இன்று நாம் அறிமுகப்படுத்தும் முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் என்ற நூல், அந்த வரலாற்றின் ஒரு குரலாகவும், அந்த சிந்தனையோட்டத்திட் தொடர்ச்சியாகவுமே நோக்குகிறேன்..
இந்த நூலின் உள்ளார்ந்த நெகிழ்ச்சி, அதன் அர்ப்பணிப்பில் தொடங்குகிறது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள், இந்த நூலை, மெல்பேர்ணில் வாழ்ந்து மறைந்த, பரி. யோவான் கல்லூரியில் primary school headmaster master துரைசாமி மாஸ்டர் அவர்களுக்கு அர்ப்பணித்துள்ளார். துரைசாமி மாஸ்டர் கடுமையான ஒழுக்க நெறி கொண்ட தலைமை ஆசிரியர், ஆனால் அதே நேரத்தில், தமிழ் மொழியின் மீதும் தமிழர் பண்டாடு மீதும் ஆழமான காதலை மாணவர்களிடம் விதைத்தவர். துரைசாமி மாஸ்டர் தினமும் பள்ளிக்கு வேட்டி அணிந்து வருவது வழமை.
இன்றைய உலகம், இன அடையாளங்களின் மீதான சிக்கலான அரசியல் விவாதங்களால் ஆழமாக பாதிக்கப்படுகிறது. முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் என்ற ஐங்கரன் அண்ணாவின் நூல், அந்தப் பாதிப்புகளின் மையத்தில் நின்று, அரபுலகில் இனங்களுக்கிடையே உருவான முரண்பாடுகளை வரலாற்று, சமூக மற்றும் அரசியல் கோணங்களில் ஆராய்கிறது.
ஐங்கரன் விக்கினேஸ்வரா, ஒரு தமிழரசியல் சிந்தனையாளர், இந்த நூலில் பன் இன அரசியலின் சிக்கல்களை மட்டும் அல்லாமல், சுயநிர்ணயத்தின் சாத்தியங்கள், இன அடையாளங்களின் மீதான உரிமை, மற்றும் பன்னாட்டு அரசியல் சூழ்நிலைகளின் தாக்கங்களை விரிவாக விவரிக்கிறார்.
இந்த நூல், எங்களிற்கு ஒரு சிந்தனையூட்டும் பயணமாகும். இது, அரபுலகின் அரசியல் சிக்கல்களைப் புரிந்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக மட்டுமல்ல, தமிழரசியல் சிந்தனையின் பரப்பை விரிவுபடுத்தும் ஒரு முயற்சியாகவும் பார்க்கலாம்.
இன அடையாளங்கள், சுயநிர்ணயம், மற்றும் பன்அரசியல் குறித்து ஆழமாக சிந்திக்க விரும்பும் ஒவ்வொருவரும், இந்த நூலைத் வாசிக்க வேண்டும்.
தற்காலத்தில் உலக அரசியல் சூழலில், இன அடையாளங்கள் மற்றும் தேசிய சுயநிர்ணயத்தின் மீதான விவாதங்கள் மீண்டும் முக்கியத்துவம் பெறுகின்றன. இஸ்ரேல்-பாலஸ்தீன முரண்பாடு, அந்த விவாதத்தின் மிகக் கடுமையான வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம், வரலாற்று உரிமை, பாதுகாப்பு, மற்றும் இன அடையாளத்தின் மீதான உரிமை; மறுபக்கம், நிலம், சுயநிர்ணயம், மற்றும் அடக்குமுறையின் எதிர்ப்பு, இந்த இரு பார்வைகளும், உலக அரசியல் மேடையில் மோதுகின்றன.
இந்த முரண்பாட்டில், “தேசிய இனம்” என்ற கருத்து, வெறும் வரையறையாக மட்டும் இல்லாமல், ஒரு வாழ்வியல் போராட்டமாக மாறுகிறது. பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையும், இஸ்ரேலின் பாதுகாப்பு சார்ந்த தேசிய அடையாளமும், ஒரே நிலத்தில் இரு எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்குகின்றன. இந்த சூழலில், முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் என்ற நூல், அந்த சிக்கல்களை புரிந்து கொள்ளும் ஒரு அடித்தளமாக அமைகிறது.
இன அடையாளங்கள் மற்றும் சுயநிர்ணயத்தின் மீதான அரசியல் விவாதங்கள், ஈழத் தமிழர்களின் வரலாற்றிலும் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தமிழ் மக்களின் மொழி, கலாசாரம், மற்றும் அரசியல் உரிமைகள் மீதான கோரிக்கைகள், ஒரு தேசிய இனமாக அவர்களை அடையாளப்படுத்தும் முயற்சியாக, தமிழ் தேசிய சிந்தனையாக உருவெடுத்தன. தமிழ் தேசியம் எனும் அடையாளம், இலங்கைத் தீவின் அரசியல் கட்டமைப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்ட போது, அது எதிர்ப்பாகவும், ஆயுதப் போராட்டமாகவும் மாறியது.
"சிவபெருமானுடைய முதுகில் விழுந்த பிரம்படி எல்லோர் முதுகிலும் சுளீரிட்டதுபோல, திலீபனின் சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது" என்று பார்த்தீனியம் புத்தகத்தில் தமிழ்நதி அக்கா, தமிழர் தேசத்தின் உணர்வலையை படிமப்படுத்துவார்.
எங்கள் எல்லோரது முதுகில் விழுந்த திலீபனின் சாவு எனும் பிரம்படி போல, தமிழ் தேசியம் எனும் கோட்பாடும் எங்கள் எல்லோரது மனங்களிலும் ஆழகாக விதைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ் தேசியம் என்ற கோட்பாடு, எங்களில் சரியாக ஊட்டப்படாமல், விதைக்கப்படாமல் போனது, வரலாறு எங்களிற்கு இழைத்த துன்பியல் நியதி.
தமிழ் தேசியம் என்றால் என்ன? தமிழ் தேசியம் ஒரு கெட்ட வார்த்தையா? தமிழ் தேசியம் என்றால் பிரிவினையா? தமிழ் தேசியம் என்றால் அடிபாடும், போராட்டமும், ஆர்ப்பாட்டமுமா? தமிழ் தேசியம் என்றால் வாக்கு அரசியலா? தமிழ் தேசியம் என்றால் சித்தாந்தம் கதைத்துக் கொண்டிருப்பதா? தமிழ் தேசியம் என்றால் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு எதிரானதா?
இல்லையடாப்பா…தமிழ் தேசியம் என்றால், காலங்காலமாக எங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த மண்ணில், எங்களது அலுவல்களை நாங்களே பார்த்துக் கொள்ளும் போதுமான அதிகாரங்களுடன், எந்தவித அடக்குமுறைக்கும் ஆளாகாமல், மான ரோசத்துடன் நாங்கள் வாழ்வது தான். எங்களிற்கு விளங்குறமாதிரி சொல்ல வேண்டும் என்றால், தாயகம், சுயாட்சி, சுயநிர்ணயம்.
எந்த ஒரு இனமோ, போராட்ட அமைப்போ, அரசியல் கட்சியோ, வியாபார நிறுவனமோ, ஏன் தனிநபரோ, தனது இருப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் சில அடிப்படைக் கோட்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். சரியான அடிப்படைக் கோட்பாடுகளை கொண்ட அமைப்புக்களும் இயக்கங்களும் தனிநபர்களும் தான் built to last வகையறாக்களுக்குள் அடங்கும்.
தமிழ் தேசியமும் அவ்வாறான ஒரு கோட்பாடே. தமிழ் தேசியம் என்பது எங்களது இனத்தின் அடையாளத்திற்கான, இருப்பைத் தக்க வைப்பதற்கான, முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு எளிய கோட்பாடு. தமிழ் தேசிய கோட்டாடு ஒரு தடைக்கல் அல்ல, தடைகளை உடைபதற்கான ஒரு திறவு கோல். தமிழ் தேசியம் இருப்பை இழப்பதற்கானதல்ல, இருப்பை தக்கவைத்துக் கொண்டு எங்களை முன்னேற்ற பாதையில் வழிநடத்தும் ஒரு கோட்பாட்டு வழிகாட்டி.
ஜேவிபி அமைப்பு தான் கொண்ட சிங்கள சோஷலிஸ தேசியவாத கொள்கையில் உறுதியாக நின்றதால் தான் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளிற்கு பின்னர் தனது இலக்கை இன்று அடைந்திருக்கிறது. தனது கொள்கையை ஆழ் மனதில் புதைத்து விட்டு, காலத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு, உலகத்தோடு ஒத்தோடி, இன்று ஜேவிபி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
பெருங் கட்சிகளோடு இணைந்து பயணித்து, அமைச்சர்களாகி, இராஜினாமா செய்து, எதிர்கட்சியில் இருந்து, இந்தியா கூப்பிட்டாலும் போய் கதைத்து, சீனாவோடும் பேச பீஜீங் போய், அமெரிக்காவோடு விருந்துண்டு, என்று பல்வேறு வெளிப்புற தோற்றங்களை அந்தக் கட்சி காட்டிக் கொண்டிருக்கும் போதும், தனது அடிப்படைவாத கோட்பாட்டை மனதுக்குள் உறுதியாக பூட்டி வைத்திருந்தது, இன்னும் வைத்தருக்கிறது.
நாங்கள் என்ன செய்கிறோம்? வெளியே ஆ ஊ என்று எங்கள் கோட்பாட்டை தொண்டை கிழிய கத்திக் கொண்டு, இனம் சார்ந்து எடுக்கும் முடிவுகளில் தமிழ் தேசியம் எனும் கோட்பாட்டைக் கோட்டை விட்டு விடுகிறோம். தமிழ் தேசியம் என்பதை ஒரு குறுகிய வட்டமாக வரையறுத்து விட்டு, குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
எதிரியோடு உறுதியாக உறவாடவும், ஏன் எதிரியை பயன்படுத்தியே நமது நலன்களை பேணவும், முன்னேறவும் தமிழ் தேசிய கோட்பாட்டில் இருக்கும் உறுதி எம்மை பலப்படுத்தும், வலுச் சேர்க்கும்.
பரந்துபட்டு, வியாபித்து, அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் உலக ஒழுங்கில் பயணிக்கவும் தமிழ் தேசிய கோட்பாடு தடையாக இராது. மாறாக, கொள்கையில், கோட்பாட்டில் உறுதியாக இருக்கும் போது, கிடைக்கும் சந்தர்ப்பங்களையும், சூழ்நிலைகளையும் சரியான முறையில் பயன்படுத்த கோட்பாடுகளே சரியான வழிகாட்டிகள், தமிழ் தேசியமும் அவ்வாறானதே.
எங்கள் இருப்பை தக்க வைக்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் பொருளதார பலத்தின் அவசியத்திற்கு தமிழ் தேசிய கோட்பாடு முரணானது அல்ல. சமூக பொருளாதார பலமே தாயகத்தின் எல்லைகளை காக்கும் அரண்; வேலைவாய்ப்பால் பசியின்றி இருந்தால் தான் உரிமைக்காக குரல் கொடுக்கலாம் போன்ற அடிப்படைகளை தமிழ் தேசியமும் தன்னகத்தே கொண்டே இருக்கிறது.
தமிழ் தேசிய மூலக்கருவை சிதைக்காதவண்ணம், எங்களை மூடிய அறைக்குள் மட்டுப்படுத்தாது, உலக ஒழுங்கின் பரந்துபட்ட எல்லைகளை தொட்டுச் செல்லவேண்டிய கட்டாயத்தில், தமிழ் தேசியத்தை செயலூட்டமிக்கதாக ஆக்க வேண்டிய காலகட்டதில், நாங்கள் பயணிக்கிறோம்.
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டம், உலக அரசியல் சூழ்நிலைகளால் நிர்ணயிக்கப்படும் ஒரு சிக்கலான பாதை. இந்தியா, ஐக்கிய நாடுகள், மற்றும் மேற்கத்திய சக்திகள் இவை அனைத்தும், அந்த போராட்டத்தின் வடிவமைப்பில் நேரடி அல்லது மறைமுக பங்குகளை வகித்தன.
முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் இந்நூல், அரபுலகில் நிகழும் இன அரசியல் முரண்பாடுகளை ஆராயும் போது, இலங்கைத் தமிழர்களின் அனுபவத்தையும் பிரதிபலிக்கிறது. ஒரு இனத்தின் உரிமை, அதன் அடையாளம், மற்றும் அதன் அரசியல் எதிர்காலம் , இவை அனைத்தும், உலக அரசியல் மேடையில் எவ்வாறு சிக்கலாக மாறுகின்றன என்பதை முரண்பாடுகள் முற்றிய அரபுலகின் தேசிய இனங்கள் என்ற இந்த நூல் நமக்கு நினைவூட்டுகிறது.
ஜூட் பிரகாஷ்
மெல்பேர்ண்